மணமணக்கும்... செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி

Posted By:

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்து கொடுங்கள். இந்த முட்டை கிரேவி செய்வது மிகவும் சுலபம். என்ன இதற்கு ஸ்பெஷலாக செட்டிநாடு மசாலாவை மட்டும் தனியாக தயார் செய்ய வேண்டும்.

இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, நாண், புல்கா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Chettinad Style Egg Gravy Recipe In Tamil

கீழே செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை - 4 (வேக வைத்து இரண்டாக வெட்டியது)

* பெரிய வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* பட்டை - 1 இன்ச் துண்டு

* கிராம்பு - 2

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

செட்டிநாடு மசாலாவிற்கு...

* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

* பூண்டு - 4 பல்

* இஞ்சி - 2 இன்ச்

* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - 2 டீஸ்பூன்

* மிளகு - 1 டீஸ்பூன்

* கசகசா - 2 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 12 நிமிடம் முட்டைகளை வேக வைத்து இறக்கி, குளிர்ந்ததும் ஓடுகளை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள மல்லி, பூண்டு, ஞ்சி, தேங்காய், சோம்பு, மிளகு, கசகசா, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த செட்டிநாடு மசாலாவை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின்னர் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டி கிரேவியில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 29, 2023, 17:45 [IST]
Desktop Bottom Promotion