For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்மா எனக்கு ஒரு சொட்டு பால் கொடுத்திடேன்... பசிக்குது - ஓர் குழந்தையின் குரல்!

பொதுஇடத்தில் தாய்ப்பால் கொடுப்பது அசிங்கமானதா? ஒர் குழந்தையின் கேள்வி

|

ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் குடிப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். அதைவிட தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராது, குழந்தை பிறந்த பின்னர் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் வராமல் தடுக்கப்படும் என்று பல நன்மைகள் சொல்லப்படுகிறது.

Is Breast Feeding in public is Crime?

ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை இந்த சமூகம் மறைமுகமாக எதிர்க்கிறதா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவமனை :

மருத்துவமனை :

இன்று நான் மருத்துவமனைக்குச் சென்றாக வேண்டும். உயிர்ப்போகும் பிரச்சனை எல்லாம் இல்லை எல்லாம் ஒரு பாதுகாப்பிற்குத் தான். என்னை அலுங்காமல் குலுங்காமல் அழைத்துச் சென்ற வர சேவகர்கள் உண்டு என்பதால் பயணத்தில் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.

என்னை பந்து போல சுருட்டி துணிக்குவியலாய் அள்ளி முடிந்திருந்தார்கள். என் அம்மா என்னை கைகளில் வைத்துக் கொண்டு மார்போடு அணைத்துக் கொண்டிருந்தார். கண் கூச்செரிய வெளியே வந்து ஆட்டோ ஏறினால். கண்களை சுருக்கி நெளிவதைப் பார்துமே எதையோ கொண்டு முகத்தை மூடிவிட்டாள்.ஒரே கும்மிருட்டு சற்று அமைதியானாலும் மூச்சு முட்டியது. மீண்டும் அழுகை என்ன செய்ய அதைத் தவிர வேறு மொழி எனக்கு தெரியாதே.

Image Courtesy

ஷேர் ஆட்டோ பயணம் :

ஷேர் ஆட்டோ பயணம் :

என் உடலே குலுங்கும்படி 10 நிமிடம் நடை. இடது தோலில் என்னத்தையோ பெரிதாக வைத்திருக்கிறாள் ஒவ்வொரு முறை கையை பின்னால் கொண்டு சென்று வரும்போதும் காலில் ‘தொம்' ‘தொம்' என்று இடிக்கிறது. வேகமாக நடக்கிறாளோ என்னவோ அம்மாவுக்கு பலமாக மூச்சு வாங்குகிறது.

திடீரென்று ஒரு பொந்து குகைக்குள் நுழைந்துவிட்டாள். உள்ளே ஏற்கனவே நான்கு பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஐவராய் என் அம்மாவும் ஐக்கியாமாகிவிட்டார். வசதியான இடம் அம்மாவுக்கு கிடைத்து விட்டது. நானிருக்கிறேன் அல்லவா! இதுவரை நேரமும் மார்போடு அணைத்து வைத்திருந்த என்னை பெரிய மைதானத்தில் உருண்டு விளையாட அனுமதி கொடுத்தது போல தன் மடியில் கிடத்தியிருந்தாள். குகை கடகட வென்ற உறுமி மெல்ல நகர்ந்தது வேகமெடுத்தது.

என் அம்மாவுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர், என் பாதங்களில் கிச்சு கிச்சு மூட்டினார் நானும் கால்களை உதைக்க சிரித்துக் கொண்டே மீண்டும் மீண்டும் அதையே செய்து கொண்டிருந்தார். அதுவும் சிரித்துக் கொண்டே என் கால் மட்டும் கொஞ்சம் நீளமாக இருந்திருந்தால் உதைத்திருக்கலாம். ஓயாமல் காலை ஆட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள், என்னை உட்கார வைத்துக் கொண்டால் வேகமாக நகரும் காட்சிகள் கவனத்தை ஈர்க்க அம்மாவோடு சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

Image Courtesy

வெட்கங்கெட்ட சிரிப்பு :

வெட்கங்கெட்ட சிரிப்பு :

எப்பப்பா..... எத்தனை வேகம் எவ்வளவு அவசரம் ஒரு கண் சிமிட்டும் நேரத்தில் என்னென்னவோ நிகழ்ந்து விடுகிறது. முந்தைய நாள் திருஷ்டி கழித்து நடு ரோட்டில் வீசியிருந்த பூசணிக்காய் வாயை பிளந்து கிடந்தது.

மம்மூ.... அது என்ன தெரியுதா? உனக்கு புடிக்குமே என்று கையை நீட்டி காண்பித்தாள் அம்மா.... அடையாளமே விளங்கவில்லை. நாங்கள் வந்த குகை அதில் ஏறி சற்று ஜெர்க்காகி குலுங்கி நின்றது. மினி நிலநடுக்கம் வந்தது போல் உணர்ந்தேன். எதேதோ வித்யாச குரல்கள்.... சில நொடி ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பயணம்.

இப்போது பயங்கர வாகன நெரிசல் நெருக்கமாக நின்றிந்தவர்களில் ஒருவர் எனக்கு கையசைத்து டாட்டா காட்டினார். டாட்டா என்றால் என்னை விட்டு வெளியே போகப்போகிறார்கள் என்று பயந்து கொண்டேன். பின் இதுவரை அறிமுகமில்லாத முகம் என்று யூகித்த பிறகு, கிளம்பு... கிளம்பு... காத்து வரட்டும் என்று நானும் கையசைத்தேன். அண்டசராசரஙக்ளையும் அழைக்கும் விதமாக அடிவயிற்றிலிருந்து ஓர் குரலை எழுப்பி த்த்தூ.....என்று துப்பினார் ஒருவர்.

அவர் எங்கேயோ இருந்தார் கண்களில் அகப்படவேயில்லை. ஆனால் காதுக்குள்ளே வந்து கத்தியது போல இருந்தது. எனக்கு மட்டும் தான் அது பயமாய் இருந்தது.

பிறர் முகம் சுழித்தனர் அம்மாவோ ‘உவாக்' என்று உமட்டிக் காட்டினாள். நானும் என்னை சிரிக்க வைக்க செய்கிறாள் என்று நினைத்து வெக்கங்கெட்டத்தனமாய் சிரித்து வைத்தேன்.

மறக்காத முகங்கள் :

மறக்காத முகங்கள் :

அதே நெருக்கடியில் அழுக்குப் புடவையுடன் ஒருவர் வந்து என் தலையில் கைவைத்தார். என் அம்மா சட்டென தூக்கிக் கொண்டு போ... போ... என்று விரட்டிவிட உள்ளேயிருப்பவர்கள் பல டோன்களில் ஆக்ரோஷமாக பேசினர். உடனே அவளும் விலகி அருகில் இருக்கும் மற்றவர்களிடம் பேசச் சென்றுவிட்டார். பின்னால் உடைகள் எல்லாம் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. சொல்லி வைத்தாற் போல எல்லாருமே விரட்டியடித்தனர்.

சில நிமிட பயணத்திற்கு பிறகு குகை மெல்ல ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. குடலை பிரட்டும் ஓர் வாடை. சுயநலக்காரி அம்மா... முந்தானை எடுத்து அவள் மூக்கை மூடிக் கொண்டால் ரோட்டின் முக்கால் வாசிப்பகுதியை ஆக்கிரமித்து கலர் கலரான குப்பைகள். அங்கே ஒரு மாடும் மூன்று நாய்களும் என்னத்தையோ தின்று கொண்டிருந்தது. அதையொட்டி ஒரு ப்ளாட்ஃபார்ம் காலியாக கிடந்தது வரிசையாக ரோட்டிற்கு முதுகை காட்டிக் கொண்டு சிலர் நின்று கொண்டும் இன்னும் சிலர் உட்கார்ந்து கொண்டும் இருந்தார்கள்.

காலிடுக்கில் இருந்து ஒழுகி வரும் நீரை பார்ததுமே என்ன செய்கிறார்கள் என்பதை யூகித்துக் கொண்டேன்.

Image Courtesy

முதல் பேச்சு :

முதல் பேச்சு :

இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது போல என்னை மீண்டும் சுருட்டி எடுத்துக் கொண்டாள், இடது தோலில் பையின் ஸ்ட்ரிப் இருக்கிறது அதன் மேலேயே என்னையும் குப்புற படுக்க வைத்திருந்தால் என் உடலில் அது அழுத்தி இடைஞ்சலாக இருக்கிறது. நெளிந்தும் வலது புறம் என்னை மாற்றிக் கொண்டால்.எனக்கு பேச்சு வந்தால் என் அம்மாவிடம் சொல்வேன்... ‘கொஞ்சம் மெதுவாத்தான் நடையேன்மா...' சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு மூடப்பட்ட கேட்டின் வாயிலில் நின்று கொண்டிருந்த யாரோ ஒருவரிடம் அம்மா பேசினாள். பின்னர் சலித்துக் கொண்டும் புலம்பிக்கொண்டும் மீண்டும் நடை....

திடிரென்று ஓர் உறுமல் சத்தம்... சுதாரித்து தோலில் இருந்து நிமிர்ந்து கண்ணை திறப்பதற்குள் மாயமாய் மறைந்துவிட்டிருந்தனர். அம்மாவோ போகுதுக பாரு..... என்று சபித்தாள். இப்போது என்னை இடுப்பில் உட்கார வைத்துக் கொண்டு சேலையை தூக்கிக் கொண்டாள் அம்மா எதோ சாகசம் செய்யப்போகிறாளோ என்று நினைத்து என்னைய கீழ போட்டிறக்கூடாதே என்ற பயத்துடனும் என்ன செய்யப் போகிறாள் என்ற ஆச்சரியத்துடனும் அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு முகத்தில் அழுகையை வரவழைத்துக் கொண்டேன்.

Image Courtesy

எனக்கான பொருட்கள் :

எனக்கான பொருட்கள் :

நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த ப்ளாட்ஃபார்மையே பெட்ரூமாக நினைத்து அஷ்டகோணலாக படுத்திருந்தார் ஒருவர். ஓரமாக இரண்டு பாட்டில்கள் கிடந்தது யாருமே எழுப்பவில்லை அவரைத் தாண்டி வருவதும் போவதுமாக சகஜமாக கடந்து கொண்டிருந்தனர்.

என் அம்மாவும் வாயை திறக்கவில்லை அந்நபரை தாண்டி வந்து கொண்டேயிருந்தாள். இடுப்பில் உட்கார்ந்திருக்கும் நான் தான் படுத்துக் கிடக்கும் நபரை பார்த்துக் கொண்டே வந்தேன்.

இன்னும் கொஞ்ச தூரம் நடக்க.... ப்ளாட்ஃபார்மில் நடக்க இடமில்லை நெருக்கமாக கடைகள் எல்லாமே குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள் என்னைப் பார்த்துமே ஆளாளுக்கு கலர் கலரான பொம்மைகளை எடுத்து நீட்டினர்.

வாங்கவா என்று நான் சற்று யோசிக்க அம்மாவோ கொஞ்சம் கூட யோசிக்கவேயில்லை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வேகமாக நகர்ந்து கொண்டேயிருந்தாள்.

Image Courtesy

பசி ஆரம்பம் :

பசி ஆரம்பம் :

மருத்துவமனைக்குள் நுழைந்து விட்டோம். எங்கெங்கோ அழைந்து திரிந்து இங்கு வேலை முடிய இரண்டு மணி நேரம் ஆகும் என்பதை அறிந்து சலிப்பாக எதையோ தேடினாள். பின்னர் வெராண்டா படியில் உட்கார்ந்து என்னை படுக்க வைத்துக் கொண்டால். லேசாக பசியெடுக்க சிணுங்கினேன் கண்டுகொள்ளவேயில்லை... நானும் இரண்டு மூன்று முறை விட்டு விட்டு சிணுங்கி நினைவூட்டினேன். அவள் எதே யோசனையில் மூழ்கியிருந்தால்

நான் சத்தமாக அழ ஆரம்பித்ததும் சரிம்மா.... சரிம்மா.... என்று தூக்கி தட்டிக் கொடுத்தாள். ம்மா.. தட்டிக்கொடுக்காத பால் குடு பசிக்குது என்று நினைத்துக் கொண்டேன். அவளும் உட்கார வைப்பது எதையோ காண்பிப்பது என்று என் கவனத்தை திசை திருப்ப முயற்சித்துக் கொண்டேயிருந்தாள். நானும் விடாப்பிடியாக இருந்தேன்.

மூச்சடைக்கும் புகை :

மூச்சடைக்கும் புகை :

பையைத் திறந்து பாட்டிலை வாயில் வைத்தால் ஆறிப்போய் எதோ வாடை வந்தது. துப்பி விட்டு மீண்டும் கத்தியழுதேன். இரண்டு முறை திணிக்கப்பார்த்தால் எனக்கு அதன் வாடையே பிடிக்கவில்லை பால் வேண்டும் பசிக்கிறது ஆனால் இந்தப்பால் வேண்டாம்.

இப்போது என்னை தூக்கி எழுந்து கொண்டாள் எங்கோ செல்லப்போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும் பசியாயிற்றே எப்படி விட்டுத்தரமுடியும் அழுது கொண்டேயிருந்தேன்.

அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்துவிட்டாள். ப்ளாட்ஃபார்மில் ஏறி நடக்க... மினி ஹோட்டல் இருந்தது சாப்பிடுவது, சமைப்பது, சாப்பிட்ட தட்டுக்களை கழுவுவது, என எல்லாமே ப்ளாட்ஃபார்மில் தான்.

தோசைக்கல்லில் தெளிக்கும் தண்ணீர் என் மேல் பட்டுத் தெரித்தது. சாப்பிட்டு இலைகளை ஒரு இடத்தில் குவியலாய் போட்டிருந்தார்கள் அதிலிருக்கும் எச்சிலை நாயொன்று தின்று கொண்டிருந்தது. அத்தனையையும் கடந்து ஒரு பெட்டிக்கடைக்குள் தலையை நுழைத்து பிஸ்கட் பாக்கெட் கேட்டாள். இரண்டடித் தள்ளி ஒருவரின் வாயிலிருந்து புகையாய் வந்து கொண்டிருந்தது . மூச்சடைக்க... கண்கள் எரிய கண்களை கசக்கிக்கொண்டு நெளிந்தேன்.

மீண்டும் சரி சரி என்று சொல்லிவிட்டு பர்ஸை திறப்பதும் பிஸ்கட்டை வாங்கி பையில் போடுவதில் தான் அம்மா மும்முரமாய் இருந்தால் அவர் சிக்கரெட்டை இழுத்து இழுத்து புகையை விட்டுக் கொண்டிருந்தார்.

தட்டிக் கொடுத்தால் பசியடங்குமா? :

தட்டிக் கொடுத்தால் பசியடங்குமா? :

மீண்டும் உள்ளே வந்து அதே படியில் உட்கார்ந்து கொண்டாள். ‘இங்கப் பாரு அம்மா உனக்கு என்ன வாங்கியிருக்கேன்னு' என்று பிஸ்கெட் பாக்கெட்டைத் காண்பித்தாள் கோபத்தில் தட்டிவிட்டு, ‘காது கேட்கிறதா இல்லையா? நான் அழுகிறேன்' என்று சத்தமாக அழுது காண்பித்தேன்.

பிஸ்கெட்டை உடைத்து தண்ணீரில் நனைத்து குழைத்து வாயில் வைத்தாள். அப்பாடா எதையோ வாயில் வைக்கிறாள் என்று ஆசையுடன் மென்றால் கசப்பாய் இருந்தது. துப்பிவிட்டேன்.

மீண்டும் அழுகை இதுவும் வேணாமா உனக்கு என்று எரிச்சலான தொனியில் ஒரு கேள்வியை கேட்டு சுற்றிலும் நோட்டம் விட்டாள். மறுபடியும் என்னைத் தூக்கிக் கொண்டு சமாதானம் செய்வதாய் தட்டி கொடுத்தாள்.

‘அம்மா தட்டிக் கொடுத்தாள் எல்லாம் பசியடங்காது... எனக்கு பால் கொடு' என்று கேட்கத் தோன்றியும் மொழியறியாமல் அவளுக்கு புரியவைக்க முடியவில்லை. என்னை தூக்கிக் கொண்டு அங்கும் இங்குமென அழைந்தாள்

Image Courtesy

கழுகுக் கூட்டம் :

கழுகுக் கூட்டம் :

அம்மாவின் மாரில் தட்டித் தட்டி நினைவூட்டி அழுதாலும் எந்த பயனும் இல்லை. எதை யோசிக்கிறாளோ ? ஏன் தயங்குகிறாளோ? தெரியவில்லை.... வரும் வழியில் எதேதோ செய்கிறார்களே அம்மா எனக்கு ஒரு சொட்டு பால் கொடுத்திடேன்... பசிக்குது அழுது அழுது சோர்ந்து போய்ட்டேன்... ரொம்ப பசிக்குது என்பதை அழுகையால் மட்டுமே உணர்த்த முடிந்தது.

அவளுக்கும் புரிந்திருக்கும் . ஆனால், எப்போது மாராப்பை விளக்குவாள் என்று காத்திருக்கும் கழுகுக் கூட்டத்தை கண்டுகொண்டதாலோ என்னவோ கையாளாகதவளாய் நிர்கதியாய் நின்றாள் அம்மா.

அசிங்கங்களையெல்லாம் சகஜமாக கடந்து போக முடியும் போது, நான் பால் குடிப்பதை மட்டும் கடந்து போக முடியாதா??? இன்று சமூகத்தைப் பற்றிய முதல் பாடத்தை கற்றுக் கொண்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Breast Feeding in public is Crime?

A baby narrating this story. finally asks question to you.
Story first published: Friday, August 4, 2017, 20:03 [IST]
Desktop Bottom Promotion