For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி கடலை மாவை உணவில் சேர்ப்பது நல்லதா? கெட்டதா?

|

இந்தியாவில் பொதுவாக அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் சமையல் பொருள் தான் கடலை மாவு. பழங்காலம் முதலாக இந்த கடலை மாவு அழகைப் பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலை மாவு ஒருவரது அழகைப் பாதுகாக்க உதவுவதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்பது தெரியுமா?

கடலை மாவானது வறுத்த அல்லது பச்சையான கொண்டைக்கடலைப் பருப்பைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. பலருக்கும் கடலை மாவு உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற எண்ணம் எழும். இதற்கு காரணம் கடலை மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் எண்ணெயில் பொரிக்கப்படுவதால் தான்.

gram flour health benefits

மற்றபடி கடலை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் கடலை மாவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான பல முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கட்டுரையில் கடலை மாவை ஒருவர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நன்மைகளைத் தெரிந்து கொண்டு, இனிமேல் கடலை மாவை அச்சமின்றி, உங்கள் உணவில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

கடலை மாவு கோதுமை அல்லாத மற்றும் டயட்டரி நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும். 100 கிராம் கடலை மாவில் 11 கிராம் டயட்டரி நார்ச்சத்து, 22 கிராம் புரோட்டீன், 11 கிராம் சர்க்கரை, 7 கிராம்பு கொழுப்புக்கள், 5 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 45 மில்லிகிராம் கால்சியம், 166 மில்லிகிராம் மக்னீசியம், 46 மில்லிகிராம் பொட்டாசியம், 4.9 மில்லிகிராம் இரும்புச்சத்து மற்றும் 41 வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. மேலும் கடலை மாவில் இதர அத்தியாவசிய கனிமச்சத்துக்களான செலினியம், காப்பர், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் போன்றவையும் நிறைந்துள்ளது.

சர்க்கரை நோய் கட்டுப்படும்

சர்க்கரை நோய் கட்டுப்படும்

கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் கடலை மாவை சப்பாத்தி அல்லது பராத்தா தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

இதய ஆரோக்கியம் மேம்படும்

கடலை மாவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான டயட்டரி நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. 100 கிராம் கடலை மாவில் 46 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஒருவரது இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் தான், இதய செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் போன்றவற்றின் அபாயம் அதிகமாக இருக்கும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்

உடல் எடையைக் குறைக்க உதவும்

சமீபத்திய ஆய்வு ஒன்றில் கடலை மாவு உடல் எடையைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்வது தான். மேலும் கடலை மாவு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவி, உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும். ஆகவே உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள், கடலை மாவு வகை உணவுகளான தோக்லா மற்றும் சிலா போன்றவற்றை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் கொண்டைக்கடலை சாலட், கொண்டைக்கடலை சூப் போன்ற வடிவிலும் உட்கொள்ளலாம்.

பசியின்மைப் போக்கும் மற்றும் மனநிலை மேம்படும்

பசியின்மைப் போக்கும் மற்றும் மனநிலை மேம்படும்

கடலை மாவில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின் செரடோனின் தொகுப்பில் ஈடுபட அவசியமானதாகும். செரடோனின் என்பது சந்தோஷமான மனநிலையைக் கொடுக்கும் ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் ஏற்ற இறக்க மனநிலையை சரிசெய்வதோடு, பசியின்மையையும் போக்கும்.

களைப்பைத் தடுக்கும்

களைப்பைத் தடுக்கும்

உடலின் ஆற்றலை மேம்படுத்தி, சுறுசுறுப்பாக இருப்பதற்கு, கடலை மாவை உங்களது டயட்டில் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள வைட்டமின் தையமின், உடலில் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறைக்கு உதவி, உடல் களைப்பைத் தடுக்கும். எனவே சோம்பேறித்தனமான உணர்வை நீக்க நினைத்தால், கடலை மாவை அடிக்கடி சாப்பிடுங்கள்.

குடல் புற்றுநோயைத் தடுக்கும்

குடல் புற்றுநோயைத் தடுக்கும்

மெக்ஸிகன் ஆய்வு ஒன்றில், கடலை மாவு குடல் புற்றுநோயை எதிர்த்துப் பாதுகாப்பு அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடலை மாவு டி.என்.ஏ மற்றும் புரோட்டீன் ஆக்ஸிஜனேற்றம் அடைவதைக் குறைப்பதோடு, குடல் புற்றுநோயை உண்டாக்கும் பீட்டா-கேட்டனின் செயல்பாட்டைத் தடுக்கிறதாம். மேலும் கடலை மாவில் சாப்போனின்கள் மற்றும் லிக்னன்கள் உள்ளன. இவை குடல் புற்றுநோயைத் தடுக்க உதவும் உட்பொருட்களாகும். எனவே உங்களுக்கு குடல் புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், கடலை மாவை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எலும்புகள் வலிமையாகும்

எலும்புகள் வலிமையாகும்

கடலை மாவில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஒன்றாக செயல்பட்டு, எலும்புகளின் உருவாக்கத்திற்கு உதவும். எனவே உங்கள் எலும்புகள் வலிமை அடைய வேண்டுமானால், முடிந்த அளவு கடலை மாவை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்புகள் வலிமையாவதோடு, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.

குடலியக்கத்திற்கு உதவும்

குடலியக்கத்திற்கு உதவும்

முறையற்ற குடலியக்கத்தால் அல்லது மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் கடலை மாவை உங்கள் டயட்டில் அன்றாடம் சேர்த்து வாருங்கள். இதில் உள்ள நார்ச்சத்து, மலம் இறுக்கமடைவதைத் தடுத்து மென்மையாக்குவதோடு, எளிமையாக மலத்தை வெளியேற்றச் செய்யும். இதன் மூலம் குடலியக்க செயல்பாடு எப்போதும் சிறப்பாக இருக்கும்.

இரத்த சோகை சரியாகும்

இரத்த சோகை சரியாகும்

கடலை மாவில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. 100 கிராம் கடலை மாவில் 4.9 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஒருவர் தொடர்ச்சியாக கடலை மாவை உட்கொண்டு வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விரைவில் விடுபடுவதோடு, இரத்த சோகை தீவிரமாகாமலும் தடுக்கலாம்.

என்ன நண்பர்களே! இதுவரை கடலை மாவின் நன்மைகளைப் படித்திருப்பீர்கள். இனிமேல் பஜ்ஜி, போண்டா என்று கடலை மாவு பலகாரங்களை உட்கொண்டு மகிழுங்கள். முக்கியமாக எண்ணெயில் பொரிக்கும் கடலை மாவு பலகாரங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். பின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே அளவாக சாப்பிட்டு வளமோடு வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Gram Flour Good For You?

Gram flour or chickpea flour, commonly known as besan in India, is popular for its beauty benefits. Read on to know the health benefits of gram flour or besan.
Story first published: Saturday, September 15, 2018, 12:45 [IST]
Desktop Bottom Promotion