For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க இதயம் துடிப்புல வித்தியாசம் இருக்கா? உடனே கவனிங்க

By Mayura Akilan
|

Cardio
மனிதர்களுக்கு இதயத்துடிப்பு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 113 முறை ஏற்படுகிறது என்கின்றர் மருத்துவர்கள். இதயத்துடிப்பு குறைந்தாலோ, அது அதிகமானாலோ ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.

மாரடைப்பு மட்டுமே இதயநோய் இல்லை, மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.

இதயம் துடிக்கவும் மின்சாரம்

தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் 'சைனஸ் நோட்'.

மின் விநியோகம் சரியா இருக்கா?

‘சைனஸ் நோட்' பகுதியில் இருந்து இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. இந்த மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால், இதயம் அதிவேகமாகத் துடிக்கும், அல்லது மெதுவாகத் துடிக்கும். இதயம் இப்படிச் சீரற்றுத் துடிப்பதைத்தான் சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.

ஓவர் கரண்ட் உடம்புக்கு ஆகாது

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrillation) என்று சொல்லக்கூடிய இதயத்தின் மேல் அறையில் இருந்து வரும் சீரற்ற அதிவேக மின் உற்பத்திதான் வேகத் துடிப்புப் பிரச்னைக்கு முக்கிய காரணம். 40 வயதுக்கு மேல் நான்கில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.

ரத்தம் உறைந்து விடும்

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு, புகைப் பழக்கம், அதிக மது அருந்துதல், தைராய்டு, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் காரணமாக வேகத் துடிப்புப் பிரச்னை ஏற்படும். அதிவேகமாக இதயம் துடிக்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் பம்ப் செய்து வெளியேற்றப்படுவதில் ஏற்படும் சிக்கல் காரணமாக ரத்தம் உறைந்துவிடும்.

பக்கவாதம் ஜாக்கிரதை

உறைந்து போன கெட்டியான ரத்தம் மூளைக்குச் செல்லும்போது அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் வரலாம். எனவே, இதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம். இதயத்தின் மேல் அறையில் தோன்றும் வேகத் துடிப்பால் உயிருக்கு ஆபத்து எதுவும் கிடையாது. அதுவே, கீழ் அறையில் இருந்து தோன்றினால், உயிருக்கு ஆபத்து நேரலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

படபடப்பு, சோர்வு, மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தோன்றும்போது, ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். முடியாதபட்சத்தில், 24 மணி நேரக் கண்காணிப்பு கருவி மூலம் கண்டறியலாம்.

இந்தப் பிரச்னைக்கு மாத்திரை - மருந்துகளின் மூலமும் ரேடியோ ஃப்ரீக்வெவன்ஸி அபலேஷன் என்ற முறையின் மூலமாகவும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதிவேக இதயத் துடிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் மருந்து - மாத்திரைகளால், பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். எனினும் வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மெதுவா துடிக்குதா?

இதயம் சிலருக்கு மெதுவாக துடிக்கும். நினைவு இழந்து மயக்கம்போட்டு விழுவது, மூளைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் ஏற்படும் கிறுகிறுப்பான மயக்கம், சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு மருந்து மாத்திரையால் பலன் இல்லை. 'பேஸ்மேக்கர்'தான் ஒரே தீர்வு என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி செய்றீங்களா?

அதிகமாக உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு ஆபத்து என்கின்றனர் நிபுணர்கள். எனவே பெரியவர்கள் வாரத்திற்கு 5 முறை அரைமணிநேரமும், சிறியவர்கள் ஒருமணிநேரமும் வாக்கிங், ஜாக்கிங் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஓவராக இதயத்தை வருத்தி உடற்பயிற்சி செய்வதை விட வீட்டு வேலைகளை அன்றாடம் செய்வதே சரியான உடற்பயிற்சியாக அமையும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

English summary

Cardiac Arrhythmias - Definition, Causes, Symptoms and Treatment | உங்க இதயம் துடிப்புல வித்தியாசம் இருக்கா? உடனே கவனிங்க

Cardiac arrhythmias comprise any abnormality or perturbation in the normal activation sequence of the myocardium. Arrhythmias stem from several causes. The heart's natural timekeeper - a small mass of special cells called the sinus node - can malfunction and develop an abnormal electrical impulse rate.
Story first published: Friday, November 9, 2012, 13:15 [IST]
Desktop Bottom Promotion