For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறு தானியங்களைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்கும் பாரம்பரிய முறைகள்!!

சிறு தானியங்களை ஆரோக்கியமான முறையில் சாப்பிடும் பாரம்பரிய முறையை இந்த கட்டுரையில் நாம் காணலாம்.

By Gnaana
|

கால மாற்றங்களில், நாம் எண்ணற்ற விஞ்ஞான வளர்ச்சிகளை கண்டுவருகிறோம், அந்த வளர்ச்சிகள் எல்லாம், நம்முடைய வெளியுலக வாழ்க்கையை, வெளித்தொடர்பை மிக எளிதாக மாற்றிவிட்டதையும், நாம் அனுபவித்து உணர்கிறோம்.

அந்த வளர்ச்சிகள் வெளியுலகோடு நின்றுவிடாமல், வீடுகளில், ஏன் நம் வீட்டு சமையலறை வரை நுழைந்துவிட்டதை, பெரியவர்கள் அதிர்ச்சியுடன் கண்டுகொண்டிருக்க, நாம், இவையும் வளர்ச்சிகளின் ஒரு பகுதியே, என்று நம்மை நாமே, சமாதானம் செய்துகொள்கிறோம்.

ஆயினும் உண்மை அதுவா? நாம் வளர்ச்சிகளின் நிலைகளில், நம்முடைய இயல்பான வாழ்க்கையை இழந்துவிட்டு, கண்டுபிடிப்புகளின் பின் செல்கிறோம். கண்டுபிடிப்புகள் எப்போதும் நம் பின்னால் இருந்தால்தானே, அது நம் வசம் இருக்கும், இப்போது நிலைமை வேறுவிதமாகிவிட்டது. இதுவே, நம் உணவுப்பழக்கங்களில், மிகக்கடுமையாக ஆக்கிரமித்துவிட்டது.

Best methods to use millets in our traditional way to strengthen our body

இயற்கை ஆர்வலர்கள், பாரம்பரிய சித்த வைத்தியர்கள் எல்லோரும் நம்முடைய நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு இந்த வகை உணவுகள் ஏற்றவை அல்ல என்று எதிர்த்தும், காட்டாற்று வெள்ளம் போல வந்த, மேலை உணவுவகைகள் யாவும், அவற்றின் முற்றிலும் செயற்கைத்தன்மைகொண்ட, மாபெரும் ஆலைகளில் இயந்திரங்களால் செயற்கை வேதிப்பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படும் செயற்கை உணவு வகைகளின் மூலம், மனிதர்களின் ஆரோக்யத்தைப் பற்றி எந்தக்கவலையும் இன்றி, தம் வணிகம் பெருகி, பெரும்பணம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், மாபெரும் நுகர்வோர் சந்தையாக விளங்கும் நம் தேசத்தை நோக்கி, படையெடுத்து வந்தனர்.

ஜங்க் ஃபுட் எனும் அவற்றால், இன்று ஒவ்வொரு வகையிலும் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு, அதனால் வந்த விழிப்புணர்வால், இன்று பலரும் எந்த உடல் நல பாதிப்புகளும் தராத, மனிதர்க்கு நலமே புரியும், இயற்கை உணவு வகைகளை நாடி வருகிறார்கள்.

ஆயினும், செயற்கை பொருளுக்கு, அதிக அளவில் விளம்பரம் செய்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தம் பக்கம் ஈர்க்கும் பன்னாட்டு மேலை உணவு வகைகளுக்கு ஈடாக, விளம்பரம் செய்ய முடியவில்லை என்பதும், நம் உணவு வகைகளை, மேலை வகைகளுக்கு ஈடாக, போதுமான அளவில் நம்மாலும் வழங்க முடியவில்லை என்பதால், வேறு வழி இல்லாமல் மீண்டும் செயற்கை உணவுகளையே,. இக்கால இளைஞர்கள் நாடுகிறார்கள் என்பதுதான், வேதனை.

இந்த நிலையைப் போக்க வேண்டும், நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் எக்காலத்திலும், சிறப்பானது, மனிதர்க்கு துன்பம் அளிக்காத நன்மையே தரும் சத்தான உணவு என்பதை, யாவரும் உணரும் வண்ணம் நாமும் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளை சிறப்பாக, ஈர்ப்பான எல்லா இடங்களிலும், பரவலாக கிடைக்கும் நிலையை ஏற்படுத்தினால், அதுவே, வருங்கால தலைமுறைகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும்.

நம்முடைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக, இந்தப் பண்டிகை காலத்தில், வெள்ளை சீனி, அயோடின் கலந்த உப்பைத் தவிர்த்து, இயற்கை வழியில், பண்டிகைக் கால இனிப்பு கார வகைகளை, உடலுக்கு நன்மைகள் செய்யும் விதத்தில் உருவாக்கி, இனி இதையே, என்றும் தொடர்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 திணை வகைகள் :

திணை வகைகள் :

கம்பு, கேழ்வரகு, திணை, பச்சைப் பயிறு உள்ளிட்ட தானிய வகைகளே, சிறு தானியங்கள் எனப்படும், இவற்றை ஒவ்வொன்றையும் தனித் தனியே அரைத்து மாவாக்கி பயன்படுத்துவது, சிறப்பு அல்லது, ஆர்கானிக் எனும் இயற்கை உணவு மையங்கள் மூலம், மாவாக வாங்கி, பயன்படுத்தலாம்.

நன்மைகள் :

நன்மைகள் :

சிறு தானியங்கள் பொதுவாக, குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரித்து, பசியின்மையைப் போக்கி, செரிமானத்தை அதிகரித்து, உடல் ஊக்கம் மற்றும் உடலை வலுவாக்கி, அவர்களை உற்சாகத்துடன் செயல் பட வைக்கும்.

இரத்தத்தை சுத்திகரித்து, உடலில் சர்க்கரை அளவை சீராக்கும், பெண்களுக்கு ஏற்படும் தாதுச் சத்துக்கள் பற்றாக்குறைகளை சரிசெய்து, அவர்களை சோர்வின்றி இருக்க வைக்கும், இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகளின் செயல்பாட்டை செம்மையாக செயல்பட வைக்கும், எல்லாவற்றிலும் மேலாக, பக்க விளைவுகள் இல்லாதது.

முதலில், சிறு தானிய மாவின் மூலம் குழந்தைகளுக்கு ஆற்றல் வழங்கக்கூடிய இயற்கை ஊட்டச்சத்து பானம், எப்படி செய்வது எனப்பார்க்கலாம்.

 ஊட்டசத்து பானம் :

ஊட்டசத்து பானம் :

கேழ்வரகு, கம்பு, பச்சைப் பயிறு, தினை மற்றும் சோளம் இவற்றை ஊற வைத்து அவை முளை விடும் சமயத்தில் எடுத்து, நிழலில் உலர்த்தி, அதன் பின் அரைத்து மாவாக்கி, பயன்படுத்த வேண்டும். இது சற்று நேரமெடுக்கும், பொறுமை அதிகம் தேவைப்படும் ஒரு செயலாகும், இதற்கு மாற்றாக, இயற்கை உணவு மையங்களில் தரமான தயாரிப்பை உறுதி செய்துகொண்டு, சிறு தானிய மாவை வாங்கி பயன் படுத்தலாம்.

இந்த மாவை, ஓரிரு ஸ்பூன்கள் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அதில் பனங் கற்கண்டு அல்லது வெல்லம் கலந்து, குழந்தைகளுக்கு அளிக்கலாம். இதையே பெரியவர்கள், இந்துப்பு, சிறிது மிளகு சேர்த்தும் பருகலாம், உடல் சோர்வை நீக்கி, உற்சாகத்துடன் செயல்படவைக்கும் தன்மையுடையது, இந்த சிறுதானியசத்து பானம்

சத்துருண்டைகள் :

சத்துருண்டைகள் :

இந்த மாவையே, மாலை வேளைகளில், வெல்லம், நெய், முந்திரி சேர்த்து தேங்காய் துருவலைத் தூவி, உருண்டைகளாகப் பிடித்து, சத்துமாவு உருண்டைகளாக்கித் தர, குழந்தைகள் விரும்பி உண்பர்.

சிலருக்கு தற்காலங்களில், கோதுமைகள் மூலம் தயாரிக்கப்படும் சப்பாத்தி வகைகளில் ஒவ்வாமை ஏற்பட்டு, சப்பாத்தி சாப்பிட விருப்பம் இருந்தும், சாப்பிட முடியாத நிலையில் இருப்பர். அவர்களுக்கு சிறந்த தீர்வாக, சிறு தானிய சப்பாத்திகள் செய்து தரலாம்.

கேழ்வரகு, சோளம், கம்பு இவற்றுடன் சிறிது ஜவ்வரிசி சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் மாவில் இந்துப்பு சேர்த்து, சிறிது சப்பாத்திக்கு பிசைவது போல, நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, சற்று நேரம் ஊற வைத்து விடுங்கள்.

பிறகு இந்த உருண்டைகளை, சப்பாத்தி தேய்ப்பது போல, தேய்த்து எடுக்கவும், இந்த மாவு கோதுமை போல அல்லாமல், தேய்த்தவுடன் உடையும் இயல்புடையது, கவனமாக தேய்த்து, கல்லில் இட்டு சப்பாத்தி போல சுட்டு எடுக்கவும். இதற்கு பாசிப் பருப்பு தால் மற்றும் தக்காளி கொத்சு சேர்த்து சாப்பிட, சுவையை கூட்டும்.

சிறு தானிய தோசை :

சிறு தானிய தோசை :

இந்த மாவை ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, அதில் இந்துப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில், நன்கு கரைத்து சிறிது நேரம் வைத்து விடவேண்டும். பிறகு, கடுகு, உளுத்தம், கடலைப் பருப்புகள், கறிவேப்பிலை இவற்றை தாளித்து அதில் இட்டு, கல்லில் தோசையாக சுட்டு எடுக்க, நறுமணமிக்க சுவையுடன், உடலுக்கு தெம்பு தரும் சிறு தானிய தோசை, அனைவருக்கும், பிடித்து விடும்.

இது போலவே, சிறு தானிய அடை, இடியாப்பம், இட்லி, புட்டு போன்ற சிற்றுண்டிகளும் செய்து, குடும்பத்தாரின், உடல் நலம் காக்கலாம்.

சிறு தானிய மாவின் மூலம், சுவை மிக்க வடை, பக்கோடா செய்யலாம். மாவில், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு கறி வேப்பிலை சேர்த்து பிசைந்து ஊற வைத்து, சற்று நேரம் கழித்து, வாணலியில் எண்ணை ஊற்றி, அதில் இந்த மாவை வடை போல, தட்டி எடுத்து சாப்பிட, வித்தியாசமான சுவையில், மிருதுவாக, இந்த சிறு தானிய வடை இருக்கும்.

இனிப்பு மற்றும் முறுக்கு வகைகள் :

இனிப்பு மற்றும் முறுக்கு வகைகள் :

சிறு தானிய மாவில் வெல்லம் சேர்த்து, நெய் ஊற்றிப் பிசைந்து, அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து, உருண்டையாக பிடிக்க, சுவை மிக்க, சிறு தானிய லட்டு உருண்டை தயார்.

சிறு தானிய மாவில் வெல்லப் பாகை கலந்து, ஏலக்காய் பொடி கலந்து, ஊற வைத்து, பின்னர், கைகளில் அதிரசம் போல தட்டி, வாணலியில் இட்டு எடுக்க, சிறு தானிய அதிரசம் சாப்பிட, புதுவித சுவையுடன் நாவில் கரையும்.

சிறு தானிய மாவிலிருந்து, இது போல இனிப்பு வகைகளுடன், முறுக்கு போன்ற வழக்கமான கார வகை பலகாரங்களையும் செய்து, உங்கள் குடும்பத்தாரை, நண்பர்களை, அசத்தலாம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! புதுவிதமான சுவை, உடலுக்கும் நன்மை!.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best methods to use millets in our traditional way to strengthen our body

Best methods to use millets in our traditional way to strengthen our body
Story first published: Friday, October 6, 2017, 15:50 [IST]
Desktop Bottom Promotion