கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Karuppu Kavuni Thengai Paal Kanji With Curry Leaves Thuvaiyal In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? ஆனால் உங்கள் டயட்டில் சுவையில்லாத உணவுகள் தான் உள்ளதா? சற்று சுவையான அதே சமயம் உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும் உணவை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் கஞ்சியை உணவில் சேர்த்து வாருங்கள்.

Weight Loss Kanji Recipes How To Make Karuppu Kavuni Thengai Paal Kanji With Curry Leaves Thuvaiyal

அதுவும் சிறுதானியங்கள், கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா போன்றவற்றைக் கொண்டு கஞ்சி தயாரித்து உட்கொள்ளும் போது, வயிறும் நிரம்பும், உடல் எடையும் குறையும். அதுவும் கருப்பு கவுனி கஞ்சியை தயாரித்து, அத்துடன் கறிவேப்பிலை துவையலை சேர்த்து உட்கொள்ளும் போது சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சி மற்றும் கறிவேப்பிலை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கஞ்சிக்கு..

* கருப்பு கவுனி அரிசி - 2 கப்
* தண்ணீர் - 10 கப்
* வறுத்த வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 15 பல் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தேங்காய் பால் - 1 கப்

துவையலுக்கு...

* வறுத்த உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 10
* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் கருப்பு கவுனி அரிசியை நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, இரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மறுநாள் காலையில் ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை குக்கரில் நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து, அத்துடன் 10 கப் நீரை ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் வெந்தயத்தை லேசாக வறுத்து சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 10-15 பல் பூண்டு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து 12 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கலந்து, மீண்டும் அதை அடுப்பில் வைத்து, கெட்டியான தேங்காய் பால் ஊற்றி கிளறி, 1 கொதி விட்டு இறக்கினால், கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சி தயார்.
* அடுத்து துவையலை செய்ய ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், பெருங்காயத் தூள், சின்ன வெங்காயம், நறுக்கிய தேங்காய், கறிவேப்பிலை, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நீர் சேர்க்காமல் அரைத்து எடுத்தால், சுவையான கறிவேப்பிலை துவையல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 20, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion