காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும்

Posted By:

Paneer Coconut Masala Recipe in Tamil: பன்னீர் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றாகும். பெரும்பாலும் சப்பாத்தி, புலாவ் போன்றவற்றுக்கு பன்னீரை வைத்து சைடிஷ் செய்வது வழக்கம். உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீரை சமைப்பீர்களா? பன்னீரை வைத்து எப்போதும் ஒரே மாதிரி பன்னீர் பட்டர் மசாலா அல்லது புர்ஜி செய்து போரடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான பன்னீர் சைடிஷை செய்ய விரும்புகிறீர்களா?

Paneer Coconut Masala Recipe How to Make at Home in Tamil

அப்படியென்றால் இந்த காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலாவை முயற்சி செய்து பாருங்கள். பன்னீரை இந்த ஸ்டைலில் செய்யும் போது, உங்கள் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அதோடு இந்த பன்னீர் மசாலாவை அடிக்கடி செய்து கொடுக்குமாறும் கேட்பார்கள். மேலும் இந்த பன்னீர் தேங்காய் மசாலா செய்வதற்கும் மிகவும் எளிதானதாகும்.

உங்களுக்கு காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 200 கிராம் பன்னீர்
- 2 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- சிறிது கறிவேப்பிலை
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கசூரி மேத்தி
- 1 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்

மசாலா அரைக்க:

- 1 கொத்து கறிவேப்பிலை
- ¼ கப் துருவிய தேங்காய்
- 1/2 ஸ்பூன் மிளகு
- 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- ½ ஸ்பூன் சீரகத்தூள்
- 2 கிராம்பு
- ½ இன்ச் இலவங்கப்பட்டை

செய்முறை:

- முதலில் பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

- ஒரு மிக்சி ஜாரில் மசாலா அரைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

- ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். மேலும் ஒரு சிட்டிகை உப்பு தூவி கிளறவும்.

- வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன்பின் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பச்சை வாசனை நீங்கியதும் கசூரி மேத்தி இலைகளை கிரேவியில் சேர்க்கவும். அதன் பின் நறுக்கிய பன்னீர் துண்டுகளைச் சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- உப்பைச் சரிசெய்து, பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பை 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

- இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, அடுப்பிலிருந்து இறக்கவும்.

- அவ்வளவுதான் சுவையான பன்னீர் தேங்காய் மசாலா ரெடி. இதை சப்பாத்தி, நாண், தோசை போன்றவற்றுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 19, 2026, 17:31 [IST]
Desktop Bottom Promotion