சேப்பங்கிழங்கை வெச்சு ஒருமுறை இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்..

Posted By:

Seppankizhangu Sukka Recipe In Tamil: மதிய வேளையில் சாதத்திற்கு ஒரு அட்டகாசமான சுவையை கொண்ட சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேப்பங்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேப்பங்கிழங்கைக் கொண்டு சுக்கா செய்யுங்கள்.

இந்த சுக்கா சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுவும் இதன் சுவை மட்டன் சுக்காவையே தோற்கடிக்கும் அளவில் ருசியாக இருக்கும்.

Seppankizhangu Sukka How To Make a Seppankilangu Roast Recipe

உங்களுக்கு சேப்பங்கிழங்கு சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேப்பங்கிழங்கு சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சேப்பங்கிழங்கு - 1/2 கிலோ
* எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 டம்ளர்

அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 20-25
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 10 பல்
* தேங்காய் - 1 சில்லு
* வரமிளகாய் - 4
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை -1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் சேப்பங்கிழங்கை நன்கு நீரில் கழுவி, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அவற்றை இட்லி தட்டில் போட்டு, இட்லி பாத்திரத்தில் வைத்து, அவற்றின் மேல் சிறிது உப்பு கலந்த நீரை தெளித்து, மூடி வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்து நன்கு குளிர வைக்க வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்துள்ள சேப்பங்கிழங்கு துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காய், வரமிளகாய், மிளகு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா அனைத்தும் கிழங்கில் சேரும் வரை, 10 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான சேப்பங்கிழங்கு சுக்கா தயார்.

Image Courtesy: apoorvas nalabagam

[ of 5 - Users]
Story first published: Friday, April 5, 2024, 13:49 [IST]
Desktop Bottom Promotion