சாதத்துக்கு ஒருடைம் இந்த குழம்பை செய்யுங்க.. வெஜ்-ன்னு சொன்னா நம்பமாட்டாங்க.. கறி குழம்பே தோத்துப் போயிடும்..

Posted By:

Saiva Kuzhambu Recipe In Tamil: மதியம் உங்களால் சமையலறையில் நீண்ட நேரம் சமைக்க முடியவில்லையா? தினமும் ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அதுவும் நீங்கள் சைவ பிரியரா? அப்படியானல் நாவிற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் ஒரு சுவையான சைவ குழம்பை குக்கரில் செய்யுங்கள்.

இந்த குழம்பு செய்ய நிறைய பொருட்கள் தேவையில்லை. வீட்டில் எந்த காய்கறி இருந்தாலும், அதைக் கொண்டு செய்யலாம். குக்கரில் செய்வதால், 1 விசில் வந்தாவே போதும். இந்த சைவ குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, தோசை, இட்லி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Saiva Kuzhambu For Rice How To Make a Veg Kuzhambu Recipe

உங்களுக்கு இந்த சைவ குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* காளான் - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* முள்ளங்கி - 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* உருளைக்கிழங்கு - 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* தேங்காய் விழுது - 4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளான காளான், முள்ளங்கி, உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலா காய்கறிகளுடன் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான சைவ குழம்பு தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Thursday, September 12, 2024, 13:40 [IST]
Desktop Bottom Promotion