இந்த ஒரு குழம்பை செஞ்சா.. 3 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. முக்கியமாக தக்காளி, காய் எதுவும் தேவையில்ல..

Posted By:

Plain Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? ஏன் தக்காளி கூட இல்லையா? மதியம் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ப்ளைன் குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பிற்கு வெங்காயத்தை தவிர, தக்காளி, காய்கறி என்று எதுவும் தேவையில்லை.

முக்கியமாக இந்த குழம்பை செய்தால் 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதுவும் சூடான சாதத்துடன் குழம்பை சேர்த்து, நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.

Plain Kuzhambu How To Make a Plain Kulambu Recipe

உங்களுக்கு ப்ளைன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ளைன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல்
* தேங்காய் - 1/2 கப்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

குழம்பிற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து கரைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் நறுக்கிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் 1 ஸ்பூன் கடுகு, 1/4 ஸ்பூன் வெந்தயம், கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்து கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, நன்கு சுண்டி எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பிளைன் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, December 22, 2025, 13:40 [IST]
Desktop Bottom Promotion