பீர்க்கங்காயை வெச்சு ஒருவாட்டி இந்த சைடு டிஷ் செய்யுங்க. இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்...

Posted By:

Peerkangai Gostu Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லிக்கு எப்போதும் சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா?

அப்படியானால் அந்த பீர்க்கங்காய் கொண்டு அருமையான சுவையில் ஒரு கொஸ்து செய்யுங்கள். இந்த பீர்க்கங்காய் கொஸ்து இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துக்கும் அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Peerkangai Gostu How To Make a Peerkangai Gostu Recipe

உங்களுக்கு பீர்க்கங்காய் கொஸ்து ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் கொஸ்து ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பீர்க்கங்காய் - 400 கிராம்

வறுத்து பொடி செய்வதற்கு...

* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6-7

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை:

* முதலில் பீர்க்கங்காயின் முனைப்பகுதிகளை நீக்கிவிட்டு, 2-3 துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பீர்க்கங்காயை இட்லி பாத்திரத்தில் வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து நிறம் மாற வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் மல்லி, சீரகம், வெந்தயம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் வேக வைத்த பீர்க்கங்காயை சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் பொடி செய்து வைத்துள்ளதை முழுமையாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் கொஸ்து தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 27, 2024, 8:16 [IST]
Desktop Bottom Promotion