ருசியான.. பன்னீர் பட்டர் மசாலாவை 15 நிமிடத்தில் செஞ்சுடலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...

Posted By:

Paneer Butter Masala In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் அந்த சப்பாத்திக்கு அடிக்கடி பன்னீர் சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பன்னீர் பட்டர் மசாலா என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி இதை செய்ய சொல்லி கேட்பார்களா?

ஆனால் நீங்கள் இதை செய்ய அதிக நேரம் எடுக்குமா? அப்படியானால் சிம்பிளாக எப்படி பன்னீர் பட்டர் மசாலாவை செய்வதென்று தெரிந்து செய்யுங்கள். சொல்லப்போனால் பன்னீர் பட்டர் மசாலாவை 15 நிமிடத்தில் கூட செய்துவிடலாம். இதை தெரிந்து வைத்துக் கொண்டால், காலை வேளையில் ஸ்கூலுக்கு, ஆபிஸிற்கு என்று கூட செய்யலாம்.

Paneer Butter Masala How To Make Paneer Butter Masala In 15 Minutes

உங்களுக்கு 15 நிமிடத்தில் பன்னீர் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே 15 நிமிடத்தில் செய்யக்கூடிய பன்னீர் பட்டர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கசூரி மெத்தி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.
* மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்ததும், மூடியைத் திறந்து பன்னீர் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சிறிது கசூரி மெத்தியை தூவி, 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 17, 2026, 18:54 [IST]
Desktop Bottom Promotion