இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..

Posted By:

Mutton Sukka Gravy Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? எப்போது மட்டன் வாங்கினாலும், அதைக் கொண்டு ஒரே மாதிரி குழம்பு, வறுவல் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த வாரம் மட்டன் சுக்கா கிரேவியை செய்யுங்கள்.

இந்த ஒரு கிரேவியை செய்தால், அதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். சிம்பிளாக சமையலை முடிக்க நினைப்பவர்கள், ரசம் செய்து, இந்த சுக்கா கிரேவியை செய்தாலே போதும் சன்டே பிரமாதமாக இருக்கும். இந்த சுக்கா கிரேவியின் ஸ்பெஷலே அதற்கு தனியாக அரைக்கும் மசாலா தான்.

Mutton Sukka Gravy How To Make Mutton Sukka Gravy Recipe

உங்களுக்கு மட்டன் சுக்கா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சுக்கா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மட்டனை வேக வைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 6 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறி மசாலா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 1 1/2 கிலோ
* தண்ணீர் - 100 மிலி
* கொத்தமல்லி தண்டு - சிறிது

அரைப்பதற்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி - 2 இன்ச் (நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* கறி மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கல்பாசி - 2 துண்டு
* பட்டை - 2 துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (நறுக்கியது)
* உப்பு - சிறிது
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து 1 நிதிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மட்டனை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 100 மிலி நீரை ஊற்றி, கொத்தமல்லியின் தண்டு பகுதியை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, 4 விசில் விட்டு, பின் குறைவான தீயில் வைத்து, 1 நிமிடம் வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறி மசாலா தூளை சேர்த்து கிளறி, துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், கல்பாசி, பட்டை கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் காஷ்மீர் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள மட்டனை மட்டும் வடிகட்டி சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* அதன்பின் மட்டன் வேக வைத்த நீரை ஊற்றி, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி, பாதி மூடி வைத்து உயர் தீயில் 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, ஒரு முறை மட்டனை கிளறி, மீண்டும் பாதியாக மூடி வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மட்டன் சுக்கா கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, March 8, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion