மங்களூர் ஸ்பெஷல் முளைகட்டிய பாசிப்பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும்

Posted By:

Mangalore Sprouted Green Gram Kurma Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைதான் பிரதான உணவாக இருக்கும். இந்த உணவுகளுக்கு பெரும்பாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவைதான் சைடிஷாக இருக்கும். புதிதாக ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்படினா முளைகட்டிய பச்சை பயிறை வைச்சு ஒரு சூப்பரான குருமா செய்யுங்க. இந்த மங்களூர் ஸ்டைல் பாசிப்பயிறு குருமா மட்டன் குருமா மாதிரியே இருக்கும்.

முளைகட்டிய பச்சை பயிறு என்பது நீண்ட காலமாக அதன் புரோட்டின் சத்துக்காக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. ஆனால் மங்களூரில் இந்த முளைகட்டிய பச்சை பயிறை வைத்து ஒரு சூப்பரான குருமா செய்வார்கள். இந்த குருமா இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கூட இந்த சுவையான குருமாவை தாராளமாக சாப்பிடலாம். இந்த குருமாவில் உருளைக்கிழங்கும் சேர்த்து செய்யப்படுவதால் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும்படி இருக்கும்.

Mangalore Sprouted Green Gram Kurma Recipe How to Make Sprouted Green Gram Kurma

உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் முளைகட்டிய பாசிப்பயிறு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் பாசிப்பயிறு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- முளைக்கட்டிய பாசிப்பயறு - 1 கப்
- உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1/2
- தனியா - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 4
- சீரகம் - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- பூண்டு பல் - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்

தாளிக்க:

- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- தோலுடன் நசுக்கிய பூண்டுப் பற்கள் - 3
- வர மிளகாய் - 1
- பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் இலவங்கப்பட்டை, தனியா, வெந்தயம், சீரகம் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

- பின்னர் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, நன்கு வதக்கவும். இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு, துருவிய தேங்காயைச் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலந்து, ஆறவிடவும்.

- இந்த கலவை ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து, அதை தனியாக வைக்கவும்.

- ஒரு பிரஷர் குக்கரில், முளைக்கட்டிய பாசிப்பயறு, நறுக்கிய உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- இந்த கலவையை நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

- பிரஷர் வெளியேறியதும் குக்கரைத் திறந்து, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். நன்கு கலந்து, கலவை கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

- ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, நசுக்கிய பூண்டு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் அதை குக்கரில் கொட்டி நன்கு கிளறி கொத்தமல்லி இலையால் அலங்கரித்தால் சூப்பரான மங்களூர் பாசிப்பயறு குருமா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, April 11, 2026, 15:14 [IST]
Desktop Bottom Promotion