மதியம் கோவைக்காயை இப்படி வறுவல் செய்யுங்க... அப்பறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...

Posted By:

Kovakkai Thengai Varuval Recipe In Tamil: மதியம் என்ன பொரியல், வறுவல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? எப்போதும் கோவைக்காயை ஒரே சுவையில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் இன்று கோவைக்காயை சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுங்கள்.

அதுவும் கோவைக்காய் தேங்காய் வறுவலை செய்து சாப்பிடுங்கள். இந்த கோவைக்காய் தேங்காய் வறுவல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இப்படி ஒருமுறை வறுவல் செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும்.

Kovakkai Thengai Varuval How To Make a Kovakkai Thengai Varuval Recipe

உங்களுக்கு கோவைக்காய் தேங்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் தேங்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோவைக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* வரமிளகாய் - 4
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் கோவைக்காயை நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், பொட்டுக்கடலை, மல்லி ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போக நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கோவைக்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து கோவைக்காயை கிளறி, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கோவைக்காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான கோவைக்காய் தேங்காய் வறுவல் தயார்.

Image Courtesy: Sousika samayal

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 2, 2024, 12:36 [IST]
Desktop Bottom Promotion