1/2 கப் கடலைப்பருப்பும், 15 சின்ன வெங்காயமும் இருந்தா.. சப்பாத்திக்கு புதுவிதமா இப்படி கிரேவி ட்ரை பண்ணுங்க..

Posted By:

Kadala paruppu Vengaya Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தியை தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் எளிய பொருட்களைக் கொண்டு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கடலைப் பருப்பும், சின்ன வெங்காயமும் உள்ளதா?

அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையான ஒரு கிரேவியை செய்யுங்கள். இந்த கடலைப்பருப்பு வெங்காய கிரேவி சற்று புதுவிதமாக இருப்பதால், நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படியான கிரேவியை பேச்சுலர்களும், வேலைக்கு செல்பவர்களும் தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்தில் உதவியாக இருக்கும்.

Kadala paruppu Vengaya Gravy How To Make a Dal Onion Gravy Recipe

உங்களுக்கு கடலைப்பருப்பு சின்ன வெங்காய கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு சின்ன வெங்காய கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலைப் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்

அரைப்பதற்கு...

* பெரிய வெங்காயம் - 2
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/4 கப்

செய்முறை:

* முதலில் கடலைப்பருப்பை கொதிக்கும் சுடுநீரில் போட்டு, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரை மணிநேரம் கழித்து, ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த கடலைப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப்பருப்பை வேக வைக்க வேண்டும்.
* கடலைப்பருப்பு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை முழுமையாக சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் தயிரை சேர்த்து கலந்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* கிரேவியில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் வதக்கிய வெங்காயம் மற்றும் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து, நீர் ஓரளவு வற்றி கிரேவி பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு சின்ன வெங்காய கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 25, 2025, 19:53 [IST]
Desktop Bottom Promotion