தக்காளி சேர்க்காமலே மட்டன் கிரேவியை சுவையா செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க..

Posted By:

Mutton Gravy Without Tomato In Tamil: தற்போது தக்காளியின் விலை உயர்வைப் பார்க்கும் போது, தக்காளியை இனிமேல் வாங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் தக்காளி இல்லாமல் எப்படி சமைப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தக்காளி இல்லாமல் பல ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் மட்டன் ரெசிபியை தக்காளி இல்லாமலேயே சுவையாக செய்யலாம். இன்று நாம் பார்க்கப் போவது தக்காளி சேர்க்காமல் மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்பதைப் பற்றி தான்.

How To Prepare Mutton Gravy Without Tomato In Tamil

இந்த மட்டன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி சேர்க்காமல் மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சேர்க்காமல் செய்யும் மட்டன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* மட்டன் - 1/2 கிலோ
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1/2 கப் அல்லது 125 மிலி
* இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப

மசாலாவிற்கு...

* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* ஜாவித்ரி - சிறிது
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 3-4
* கல்பாசி - 1 சிறிய துண்டு
* பட்டை - 1 இன்ச்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

கிரேவிக்கு...

* பெரிய வெங்காயம் - 4
* பிரியாணி இலை - 2
* நெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த மட்டனுடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களான தயிர், நெய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை ஒரு கண்ணாடி அல்லது காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுக் கொள்ளுங்கள். பின்பு தேவையான போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடேற்ற வேண்டும்.
* பிறகு அதில் பிரியாணி இலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, மட்டன் நீர் விட்டு வற்றும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் பொடியை மட்டும் சேர்த்து, அதோடு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் மட்டன் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மேலே அரைத்து வைத்து மீதமுள்ள பொடியைத் தூவி கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 6, 2023, 14:00 [IST]
Desktop Bottom Promotion