சப்பாத்திக்கு ஒருடைம் இந்த சைடு டிஷ்ஷை செஞ்சு குடுங்க.. அடிக்கடி செஞ்சு குடுக்க சொல்லுவாங்க...

Posted By:

Tomato Thokku Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் தக்காளியும், வெங்காயமும் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தொக்கு செய்யுங்கள். இதுவரை நீங்கள் தக்காளி தொக்கு செய்திருப்பீர்கள்.

ஆனால் இந்த பக்குவத்தில் தக்காளி தொக்கு செய்யுங்கள். பின்பு பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள். இப்படியான தக்காளி தொக்கு ரெசிபியை பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், சட்டென்று சமையலை முடிக்கலாம்.

How To Make A Tomato Thokku Recipe

உங்களுக்கு தக்காளி தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 டம்ளர்
* நாட்டுச்சர்க்கரை/சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, தக்காளி தொக்குவில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 3, 2025, 20:16 [IST]
Desktop Bottom Promotion