2 கொய்யாக்காய் இருந்தா.. இந்த மாதிரி ரசம் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அல்டிமேட்டா இருக்கும்..

Posted By:

Guava Lemon Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? தினமும் தவறாமல் ரசம் செய்வீர்களா? அதோடு அடிக்கடி வித்தியாசமான ரசம் ரெசிபிக்களையும் முயற்சிப்பீர்களா? அப்படியானால் இதுவரை நீங்கள் இளநீர் ரசம், மாங்காய் ரசம் என்று பலவிதமான வித்தியாசமான சுவையைக் கொண்ட ரசத்தை செய்திருப்பீர்கள்.

ஆனால் கொய்யாக்காய் கொண்டு ரசம் செய்யலாம் என்பது தெரியுமா? நிச்சயம் இந்த ரசத்தை நீங்கள் வீட்டில் செய்திருக்கமாட்டீர்கள். ஏன் இப்போது தான் இந்த மாதிரி ரசம் செய்யலாம் என்பது கூட பலருக்கும் தெரிந்திருக்கலாம். உங்களுக்கு இந்த கொய்யாக்காய் ரசத்தை சுவைக்க ஆசையாக உள்ளதா? உங்கள் வீட்டில் 2 கொய்யாக்காயும், 1 எலுமிச்சையும் இருந்தால், இந்த ரசத்தை செய்து பாருங்கள். நிச்சயம் இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

Guava Rasam How To Make a Guava Lemon Rasam Recipe

உங்களுக்கு கொய்யாக்காய் லெமன் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொய்யாக்காய் லெமன் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மிதமான அளவில் பழுத்த கொய்யா - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பூண்டு - 5-6 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி - 1
* தண்ணீர் - 1 1/2 கப் + 2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* எலுமிச்சை - 1

செய்முறை:

* முதலில் இடி உரல் அல்லது மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் அதிகம் பழுக்காத, அதே சமயம் அதிகம் காயாக இல்லாத கொய்யாவை எடுத்து துண்டுகளாக்கி சேர்த்து, அத்துடன் 1 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த கொய்யா வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியில் கொய்யா சாற்றினை ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி கலந்து, நுரை கட்ட தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து, அதோடு 1 முழு எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்தால், சுவையான கொய்யாக்காய் ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 15, 2025, 15:11 [IST]
Desktop Bottom Promotion