முட்டையை வெச்சு ஒருமுறை இப்படி தொக்கு செஞ்சு பாருங்க.. அட்டகாசமா இருக்கும்..

Posted By:

Egg Thokku Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக முட்டை தொக்கு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டை தொக்கு செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக முட்டையைக் கொண்டு முதலில் பணியாரம் செய்துவிட்டு, அதன் பின் அதைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.

இப்படி முட்டை தொக்கு செய்யும் போது, முட்டை சாப்பிட நன்றாகவும் இருக்கும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இந்த முட்டை தொக்கு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Egg Thokku How To Make A Muttai Thokku Recipe

உங்களுக்கு இந்த முட்டை தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை - 3
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தொக்கு செய்வதற்கு...

* எண்ணெய் - 1 டேபள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடலை மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டை கலவையை குழிகளுக்குள் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து செய்து வைத்துள்ள முட்டை பணியாரங்களை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முட்டை தொக்கு தயார் .

Image Courtesy: Amma Samayal

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 5, 2024, 19:51 [IST]
Desktop Bottom Promotion