கோவை அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் ரெசிபி... வீட்லேயே செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...!

Posted By:

Coimbatore Annapoorna Hotel Style Sambar Recipe in Tamil: தமிழர்களையும் சாம்பாரையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. டிபனாக இருந்தாலும் சரி, சாதமாக இருந்தாலும் சரி அதற்கு சிறந்த காம்பினேஷன் என்றால் அது சாம்பார்தான். தமிழ்நாட்டில் பல பிரபலமான உணவகங்கள் உள்ளன, அவற்றில் பரிமாறப்படும் சாம்பார் தமிழகம் முழுவதும் பிரபலமானதாக இருக்கும். அப்படி கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமான ஒரு சாம்பார்தான் கோயம்பத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார்.

இந்த சாம்பார் இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? இந்த சாம்பாருக்கு ஒரு ஸ்பெஷல் மசாலாவை அரைக்க வேண்டும். இந்த மசாலாவும், முருங்கைக்காயும் இருந்தால் போதும் வீடே மணக்கும் சாம்பாரை செய்யலாம். இந்த வகை சாம்பார் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Coimbatore Annapoorna Hotel Style Sambar Recipe

உங்களுக்கு அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அரை கப் துவரம் பருப்பு
- 2 கப் தண்ணீர்
- 2 முருங்கைக்காய்
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 10 நறுக்கிய சின்ன வெங்காயம்
- 1 நறுக்கிய பெரிய தக்காளி
- 1 டீஸ்பூன் உப்பு
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கப் தண்ணீர்

சாம்பார் மசாலாவுக்கு:

- 2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
- 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- கால் ஸ்பூன் கருப்பு மிளகு
- சிறிதளவு வெந்தயம்
- 2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 3 வர மிளகாய்
- 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
- 3 டேபிள்ஸ்பூன் புதிய துருவிய தேங்காய்
- 1 டீஸ்பூன் வெல்லம்
- நெல்லிக்காய் அளவு புளி

மற்ற பொருட்கள்:

- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி
- 1 டேபிள் ஸ்பூன் நெய்

தாளிப்பதற்கு:

- 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்

செய்முறை:

- அரை கப் துவரம்பருப்பை கழுவி, தேவையான அளவு தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அந்த தண்ணீருடன் பருப்பை குக்கரில் வைத்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

- அடுப்பிலிருந்து இறக்கி, குக்கரில் உள்ள அழுத்தம் தானாகவே குறையும் வரை காத்திருக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.

- மற்றொரு குக்கரில் முருங்கைக்காய், நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்க்கவும்.

- ஒரு கப் தண்ணீர், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். நான்கு விசில் வரும் வரை வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி, குக்கரில் உள்ள அழுத்தம் தானாகவே குறையும் வரை காத்திருக்கவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.

- மசாலா தயாரிக்க ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, அதில் கொத்தமல்லி விதைகள், சீரகம், மிளகு, வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- ஒரு நிமிடம் வறுக்கவும். கடலைப்பருப்பு பொன்னிறமானதும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், தேங்காய், வெல்லம் மற்றும் புளி ஆகியவற்றைச் சேர்க்கவும். 30 வினாடிகள் வறுக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.

- இந்த கலவையை அரை கப் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். அந்த விழுது மிகவும் லேசான கொரகொரப்புடன் இருக்க வேண்டும்.

- ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்து, அதில் அரைத்த மசாலாவையும் ஒரு கப் தண்ணீரையும் சேர்க்கவும். அதை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

- கொதி வந்ததும், சமைத்த காய்கறிகளையும், காய்கறி வேகவைத்த தண்ணீரையும் அதில் சேர்க்கவும்.

- உப்பின் அளவை சரிபார்த்து தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். அதை மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் வேகவைத்த பருப்பைச் சேர்த்து, மேலும் 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து, உடனடியாக அதை கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும்.

- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியையும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான கோயம்பத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Thursday, December 11, 2025, 16:58 [IST]
Desktop Bottom Promotion