வெஜிடபிள் பிரியாணிய இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் ட்ரை பண்ணுங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!

Posted By:

Chettinad Vegetable Biriyani Recipe: செட்டிநாடு உணவுகளுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு. அதனால்தான் அனைத்து உணவகங்களிலும் செட்டிநாடு உணவுகள் என்று போர்டு வைக்கப்படுகிறது. ஏனெனில் செட்டிநாடு உணவில் மற்ற ஊர் உணவுகளை விட வித்தியாசமான மசாலா சேர்க்கப்படும். இது பெரும்பாலும் பல உணவுகளில் தொடர்கிறது.

பொதுவாக வெஜிடபிள் பிரியாணி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகும். இந்த வழக்கமான உணவையே செட்டிநாடு முறையில் வித்தியாசமான சுவையில் சூப்பராக சமைக்கலாம். இந்த பதிவில் செட்டிநாடு ஸ்டைலில் வெஜிடபிள் பிரியாணியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Chettinad Vegetable Biriyani Recipe How to Make Chettinad Vegetable Biriyani

தேவையான பொருட்கள்:

- அரிசி - 1 கப்
- பெரிய வெங்காயம் - 2
- கேரட் - 2
- பீன்ஸ் - 15
- பச்சை பட்டாணி ¼ கப்
- தக்காளி பழம் - 1 (பெரியது)
- இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - ¼ டீ ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- புதினா இலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு

மசாலா அரைக்க:

- பட்டை துண்டு - சிறியது (2 இன்ச் அளவில்)
- பிரியாணி இலை - 1
- வரமிளகாய் - 10
- அன்னாசி பூ - 1
- மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- ஏலக்காய் - 15
- கிராம்பு - 15
- வரமல்லி(கொத்தமல்லி விதை) - 1 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 10
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

- முதலில் 1 கப் அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

- நன்கு பழுத்த தக்காளியை கழுவி பொடிப்பொடியாக நறுக்கவும்.

- கேரட் மற்றும் பீன்ஸை உங்கள் விருப்பமான அளவில் நறுக்கி கொள்ளவும்.

- பின் மசாலா அரைக்க வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பட்டை, பிரியாணி இலை, வரமிளகாய், மற்றும் அன்னாசி பூ சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து கொள்ளுங்கள்.

- அதனுடன் மிளகு, கருவேப்பிலை, ஏலக்காய், கிராம்பு, கொத்தமல்லி விதை, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, சோம்பு, மற்றும் சீரகம் சேர்த்து லேசாக வாசம் வரும் வரை கருகி விடாமல் வறுக்கவும்.

- பின் அடுப்பை அணைத்து வறுத்த பொருட்களை நன்றாக ஆற விடவும்.

- ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்களை எல்லாம் சேர்த்து பொடி செய்தால் செட்டிநாடு பிரியாணி மசாலா பொடி தயார்.

- இதை ஒரு ஈரமில்லாத பாட்டிலில் கொட்டி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும்.

- அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய விடவும்.

- பின் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கவும்.

- அதனுடன் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

- பின் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

- அதனுடன் அரைத்து வைத்திருக்கும் செட்டிநாடு மசாலாவில் இருந்து டீ 3 ஸ்பூன் போட்டு எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக கலந்து விடுங்கள்.

- பின் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி ஒரு நிமிடம் வதக்கவும்.

- அதனுடன் ஊற வைத்த அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கரை மூடவும்.

- உங்க அரிசிக்கு ஏற்ப விசில் விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாட்டு வெஜ் பிரியாணி ரெடி!

குறிப்பு:

- அரைத்து வைத்த செட்டிநாடு மசாலா பொடியை தேவைப்படும்போது பிரியாணி, மற்றும் குருமா போன்ற ரெசிபிகளுக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- இதை சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, சிக்கன் பிரியாணி, மற்றும் மட்டன் பிரியாணி உடன் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Friday, June 13, 2025, 22:20 [IST]
Desktop Bottom Promotion