4 கத்திரிக்காயும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இந்த செட்டிநாடு ரெசிபியை செய்யுங்க.. அள்ளும்...

Posted By:

Chettinad Therakkal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் சாதத்துக்கு வித்தியாசமான குழம்பு கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு செட்டிநாடு ரெசிபியை செய்யுங்கள். அது தான் செட்டிநாடு தெரக்கல்.

இந்த செட்டிநாடு தெரக்கல் சாதத்துக்கு மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இதை செய்தால், பின் அடிக்கடி நீங்கள் செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை நாவில் நிற்கும். இந்த தெரக்கல் செய்வதற்கு சுலபமானது என்பதால், பேச்சுலர்களும் ட்ரை செய்யலாம்.

Chettinad Therakkal How To Make a Chettinad Therakkal Recipe

உங்களுக்கு செட்டிநாடு தெரக்கல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு தெரக்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

முதல் பேஸ்ட்டிற்கு...

* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

இரண்டாவது பேஸ்ட்டிற்கு...

* தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* கசகசா - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சோம்பு, மிளகு, மல்லி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, கசகசா மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், 4 பல் பூண்டு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள முதல் பேஸ்ட் மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, நெய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான செட்டிநாடு தெரக்கல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 24, 2026, 13:42 [IST]
Desktop Bottom Promotion