வீட்ல முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செய்யுங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!

Posted By:

Chettinad Murungakkai Kootu Recipe In Tamil: அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது முருங்கைக்காய்தான். எந்த குழம்பாக இருந்தாலும் அதில் ஒரு முருங்கைக்காயை போட்டால் அதன் மணமும், சுவையும் பலமடங்கு அதிகரித்துவிடும். முருங்கைக்காய் ஒரு சுவையான காய்கறி என்பதை விட அதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடுவது உடம்பை இரும்பு போல மாற்றும். முருங்கைக்காயை எப்போதும் போல சாம்பார் மற்றும் புளிக்குழம்பு என செய்யாமல் முருங்கைக்காயை வைத்து புதிய டிஷ்ஷை முயற்சிப்பது வீட்டில் அனைவரையும் முருங்கைக்காயை சாப்பிடத் தூண்டும். அந்த வகையில் செட்டிநாடு ஸ்டைலில் முருங்கைக்காயை கூட்டு செய்து சுவைத்து பார்க்கவும். இந்த முருங்கைக்காய் கூட்டு சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் செட்டிநாடு ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Chettinad Murungakkai Kootu Recipe How to Prepare Chettinad Murungakkai Kootu

தேவையானப் பொருட்கள்:

- முருங்கைக்காய் - 5
- துவரம் பருப்பு - 50 கிராம்
- சின்ன வெங்காயம் - 20
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு - 3 பல்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வர மிளகாய் - 5
- மல்லி விதை - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் முருங்கைக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- வரமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம் ஆகியவற்றை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

- வெங்காயத்தை இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

- பச்சை மிளகாயை கீறியும், பூண்டுப் பல்லை தட்டியும் வைக்கவும்.

- ஒரு சிறிய பாத்திரத்தில் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு கரைத்து வைக்கவும்.

- தேங்காயை மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

- பருப்பு முக்கால்வாசி வெந்ததும் அதில் முருங்கைக்காய், பூண்டு, மசாலாக் கரைசலை ஊற்றி முருங்கைகாய் வேகும் வரை வேக விடவும்.

- பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து சேர்த்து தாளித்து பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

- பின் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து வேகவைத்த முருங்கைக்காய் கலவையை ஊற்றி ஐந்து நிமிடம் கொதித்ததும் தேங்காய் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து இறக்கினால் சூப்பரான செட்டிநாடு முருங்கைக்காய் கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, April 28, 2025, 20:34 [IST]
Desktop Bottom Promotion