சப்பாத்திக்கு அற்புதமாக இருக்கும்.. குடைமிளகாய் கிரேவி

Posted By:

Capsicum Gravy For Chapathi: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் உள்ளோர் குடைமிளகாயை விரும்பி சாப்பிடுவார்களா?

அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவி செய்யுங்கள். இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Capsicum Gravy For Chapathi In Tamil

முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்களுக்கு குடைமிளகாய் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே குடைமிளகாய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்குவதற்கு...

* குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

வதக்கி அரைப்பதற்கு...

* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1
* பூண்டு - 1 கையளவு
* இஞ்சி - 1 இன்ச்
* தயிர் - 1/4 கப்

கிரேவிக்கு..

* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். குடைமிளகாயும், வெங்காயமும் நன்கு வதங்கியதும், அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின்பு தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி கலவை குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தயிர் சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, மிதமான தீயில் வைத்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* மசாலாவின் பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது அடிப்பிடிப்பது போன்று இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதை கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 2 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் கரம் மசாலா மற்றும் கசூரி மெத்தியை சேர்த்து கிளறி, அதைத் தொடர்ந்து வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கிளறி, மூடி வைத்து, எண்ணெய் பிரியும் வரை மீண்டும் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் கிரேவி தயார்.

Image Courtesy: spiceindiaonline

[ of 5 - Users]
Story first published: Friday, June 2, 2023, 18:00 [IST]
Desktop Bottom Promotion