கத்திரிக்காயை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Kathirikai Varuval Recipe In Tamil: மதியம் சிம்பிளா சமையலை முடிக்கணுமா? அதே சமயம் ஒரு நல்ல ருசியான சைடு டிஷ் செய்யணுமா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கத்திரிக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களுக்கு கத்திரிக்காயை இந்த பக்குவத்தில் வறுவல் செய்து கொடுங்கள்.

இந்த கத்திரிக்காய் வறுவல் ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த வறுவலுக்கு தனியாக ஒரு பொடி வறுத்து அரைத்து சேர்ப்பதால், இதன் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். ஒருமுறை இப்படி வறுவலை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

Brinjal Fry How To Make a Kathirikai Varuval

உங்களுக்கு கத்திரிக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பொடிக்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

வறுவலுக்கு...

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கத்திரிக்காய் - 350 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மல்லி, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வறுத்த வேர்க்கடலை சேர்த்து சிறிது நேரம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பல்ஸ் மோடில் விட்டு விட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கத்திரிக்காயை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து கத்திரிக்காயை கிளறி விட வேண்டும்.
* கத்திரிக்காய் ஓரளவு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மூடி வைத்து 7 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் பெருங்காய் தூள் மற்றும் வறுத்து அரைத்த பொடியில் பாதியை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி, 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பொடி கத்திரிக்காய் வறுவல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 12, 2025, 14:11 [IST]
Desktop Bottom Promotion