சன்டே ஸ்பெஷல்: கமகமக்கும்... அரைச்சுவிட்ட மட்டன் குழம்பு

Posted By:

Arachuvitta Mutton Kuzhambu Recipe: இன்று விடுமுறை என்பதால் பலரும் தங்கள் வீடுகளில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியுள்ளீர்களா? எப்போதும் அந்த மட்டனைக் கொண்டு ஒரே மாதிரி தான் குழம்பு வைத்து சாப்பிடுவீர்களா?

இந்த வாரம் சற்று வித்தியாசமான ருசியில் மட்டன் குழம்பு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் அரைச்சுவிட்ட மட்டன் குழம்பை செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பு இட்லி, சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Arachuvitta Mutton Kuzhambu Recipe

உங்களுக்கு அரைச்சுவிட்ட மட்டன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2-3 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 4-5
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூ

தேங்காய் விழுதிற்கு...

* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 2

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் தூள், மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய மட்டனைப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள விழுது, சிறிது உப்பு சேர்த்து, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதே சமயம், மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, முந்திரியைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, குழம்பு மிளகாய் தூளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் குக்கரில் வேக வைத்துள்ள மட்டனில் இருக்கும் நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக மட்டன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, 12-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான அரைச்சுவிட்ட மட்டன் குழம்பு தயார்.

Image Courtesy: naliniscooking

[ of 5 - Users]
Story first published: Sunday, January 7, 2024, 10:32 [IST]
Desktop Bottom Promotion