வெறும் 4 அப்பளம் இருந்தா போதும்.. மதியம் டக்குன்னு சூப்பர் குழம்பு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க...

Posted By:

Appala Kulambu Recipe In Tamil: மதியம் சமைக்க வீட்டில் காய் எதுவும் இல்லையா? அதே சமயம் டக்கென்று மதிய சமையலை முடிக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் அப்பளம் இருக்கா? அப்படியானால் அந்த அப்பளத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்யுங்கள்.

இந்த அப்பள குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இது சூடான சாதத்துடன், நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Appala Kuzhambu How To Make a Appala Kulambu Recipe

உங்களுக்கு அப்பள குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அப்பளம் - 4-6
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 5-8 பல்
* சின்ன வெங்காயம் - 15
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊ0ற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அப்பளத்தைப் போட்டு பொரித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் பொரித்து வைத்துள்ள அப்பளத்தை நொறுக்கி சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, வெல்லத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி கிளறி இறக்கினால், சுவையான அப்பள குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 28, 2024, 15:10 [IST]
Desktop Bottom Promotion