For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் தானம், கொடை என்றாலே பாரி வள்லலை சொல்கிறோம் தெரியுமா?

By Gnaana
|

சங்கத்தமிழ் காலம்! தமிழ் மொழியின் வளமையும், ஆளுமையும் வானுயர்ந்து நின்ற பொற்காலம். அந்தக் கால கட்டத்தில், மனிதர் வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகளை உரைக்கும் உலகப் பொது மறை திருக்குறள், நன்னூல்கள், திரிகடுகம், ஏலாதி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற அரிய நூல்கள் இயற்றப்பட்டன.

சங்ககால மன்னர்கள் அறநெறி தவறாது ஆட்சி செலுத்தி, மக்களை நல்வழியில் நடத்தினார்கள். தமிழ் மொழிப் புலவர்களுக்கெல்லாம், ஆதரவாக இருந்து, அவர்கள் வாழ்விற்கு வள்ளல்கள்போல, வளம் தந்தார்கள். மிக நீண்ட சங்கத் தமிழ் காலத்தின், கடைசிக் காலகட்டமாகக் குறிக்கப்படும், கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன்தான், கடையேழு வள்ளல்களில் தலைசிறந்த வேள்பாரி!.

பறம்பு மலையின் காவலன்.

வேள்பாரி மன்னன் ஆட்சி செய்துவந்த பறம்பு மலை ஆளுமையில், முன்னூறுக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்கள் இருந்தன.
மன்னன் பாரி, வீரத்தில் சிறந்தவனாக விளங்கினாலும், தான தருமத்தில், அள்ளிக் கொடுப்பதில், அவனுக்கு நிகர் எவரும் இல்லை என்று தான், கவி கபிலர் மாரியை, பருவம் தவறாமல், பொய்க்காமல் பொழிந்த மழையை, பாரியின் கொடைத்திறனுக்கு நிகராக ஒப்பிடுகிறார்.

இயற்கை வளம், மண் வளம் காக்கத் தேவையான அளவில் பெய்யும் மழையைப் போல, வறுமையில் வாடும் புலவர்கள் வாழ்வில் செழிக்க, அள்ளி அள்ளி வழங்குபவன் அல்லவா, பாரி! அதோடுமட்டுமா, அவன் ஆளுமையில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அவன் அல்லவா, மெய்யான காவலன், என்று பெருமிதம் கொள்கிறார், கபிலர்.
பறம்பு நாடு, மலையின் உச்சியில் இருந்து ஆட்சி செலுத்தியதாலோ என்னவோ, பாரியின் கொடைத்திறன் எங்கும் பரவி, பாரியைப்போல ஒரு மன்னன், ஒரு வள்ளல் இந்த உலகில் உண்டோ என்று பாரி தேசத்தின் மக்கள் மட்டுமன்றி, அருகில் உள்ள பாண்டிய சோழ மற்றும் சேர நாட்டு மக்கள் பேச, ஆட்சியில் இருந்த மன்னர்கள் வெகுண்டார்கள்.

நம் தேசத்தில் ஒரு கடுகு போன்ற நிலப்பகுதியை ஆளும், ஒரு சாதாரண குறுநில மன்னன், நம்மைவிட அதிகமாக, மக்களால், கொண்டாடப்படுகிறானே, என்ற கோபத்தில் இருந்தாலும், மக்களின் மனங்களை வெல்ல, தாமும், பாரியைப் போல தானம் செய்து பார்த்தனர், அது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் போல இருந்ததே அன்றி, பாரியின் வள்ளன்மைக்கு ஈடாக வில்லை.

இரப்பவர்க்கு ஈதல் எனும் செயல், ஆழ்மனதில் பதிந்த ஆத்மார்த்த உணர்வின் நல்லெண்ண வெளிப்பாடுகள்.மேலோட்டமாக ஆற்றும் செயல்களில், அதைப் போன்ற அர்ப்பணிப்பும், ஆற்றலும் இருக்காதல்லவா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரியின் வள்ளல்தன்மை

பாரியின் வள்ளல்தன்மை

புலவர்கள் வாழ்த்திப்பாடியபின், பொற்காசுகள் அளிப்பது, அரசர்கள் வழக்கம், ஆனால், பொற்குவியல் அளிப்பது, பாரி, எனவேதான், பாரி மன்னரிடம் தமிழில் பாட, புலவர்கள் பிற தேசங்களில் இருந்தும், பறம்பு மலைக்கு வந்து குவிந்தனர்.

Image source

முல்லைக்கு தேர் :

முல்லைக்கு தேர் :

கொடையில் சிறந்த பாரி மன்னனுக்கு, இயற்கை அளித்த வரம் போல பறம்பு மலை, விளங்கியது, இயற்கை வளம் கொஞ்சி விளையாடிய பறம்பு மலையில் எங்கும் செல்வ வளம். செழிப்பின் உச்சத்தில் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். விவசாயிகள் பயிர் செய்யாமலேயே, பயிர்கள் வயல் வெளிகளில் விளைந்த, பொற்காலமது.

அக்காலங்களில், பாரி நகர்வலம் செல்வது வழக்கம், ஒருமுறை அப்படி செல்லும்போது, இயற்கை அழகு கொஞ்சும் கானகத்தின் வழியே தேரில் செல்லும்போது சுற்றிலும் மரங்கள் செடிகள் இல்லாத ஒரு சமவெளியில், பெரு மரங்களையே புரட்டிப் போட்ட ஆழிக்காற்றில் தப்பிய சிறு செடிபோல, காற்றில் ஒரு முல்லைக்கொடி, அங்கும் இங்கும் அலைக்கழிந்து ஆடுவதைக்கண்டு பதறிய மன்னன், உடனே தேரை நிறுத்தி, குதித்து கொடியின் அருகே ஓடுகிறான்.

முல்லைச்செடி, மன்னனை நோக்கி. பற்றிப்படர அருகில் எதுவும் இல்லாமல், காற்றடிக்கும் போதெல்லாம் அல்லாடுகிறேனே, என்னைக் காக்க மாட்டீர்களா, மன்னா என்று அந்த சிறிய மலர்ச்செடி, தன்னைப் பார்த்து கேட்பதுபோல, வீசும் காற்றில் கொடி அசைவதைக் கண்ட மன்னன்,

ஒரு வினாடி கூட யோசிக்காமல், தேரோட்டியை குதிரையை அவிழ்த்துவிட்டு, தேரை, அருகில் கொண்டுவரப் பணிக்கிறான், தேரோட்டியும் அவ்வாறே செய்ய, பற்றிப்படர கொழுகொம்பில்லாமல் தவித்த சிறு முல்லைக் கொடியை, மெதுவாகத் தேரில் படர விடுகிறான் பாரி. நடந்தே சென்று அரண்மனையை அடைகிறான்.

தேரோட்டி மூலம் நடந்ததை அறிந்த மக்கள், முல்லைக்கு தேர் ஈந்த பாரி மன்னர் வாழ்க என்று எழுப்பிய, ஆரவாரப்பேரொலி, மலையில் இருந்து கீழே இறங்கி, சேர, சோழ பாண்டிய மன்னர்களின் காதுகளை நாராசமாகத் தாக்கியது.

மூவரும் சதி!

மூவரும் சதி!

ஒரு குறுநில மன்னரை எதிர்த்து, மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை ஆளும், சேர சோழ பாண்டிய மன்னர்கள், அதுவும் சேர்ந்து சதி செய்தார்கள் என்றதும், பலர் திகைக்கக்கூடும், ஆயினும், அந்த காலகட்டத்தில், தமிழகத்தில் இந்த மூவேந்தர்கள் மாபெரும் நிலப்பரப்பை ஆளவில்லை என்பதையும், வேறு சிலரின் ஆக்ரமிப்பால் தான் இவர்கள், தங்களை தற்காத்துக்கொள்ள, இணைந்திருக்கக்கூடும் என்பதை, புறநானூற்றுப் பாடல்கள் மூலம் நாம் அறிய முடியும்.

இவர்கள் ஒருமுறை தனித்தனியே படையெடுத்து வந்ததாகவும், அப்போது பாரி மன்னன் அவர்களை விரட்டி போரில் வென்றான் எனவும், அதன் காரணமாகவே, அவனை ஒன்று சேர்ந்து அழிக்க திட்டமிட்டு, மூவரும் இணைந்ததாகவும், வரலாறு கூறுகின்றன.

ஆயினும், பல மாத முற்றுகையிலும் பறம்பு மலையை வீழ்த்த, அவர்களால் முடியவில்லை. இயற்கை வளம் நிரம்பிய மலை, மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு வெளி உலகை, சார்ந்திராமல், மக்களுக்குத் தேவையானவற்றை தானே வழங்கி, அவர்களைக் காத்தது.

பொறுமை இழந்த அவர்கள், சூழ்ச்சி செய்து, புலவர்களைப் போல அரண்மனைக்குள் நுழைந்து, பாரியைக் கொன்றார்கள் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

புலவர்களின் கொடைவேந்தனை, மக்களின் அரசனை, தனது உயிர் நண்பனின் இன்னுயிரை, சதி செய்து பறித்த மன்னர்களின் கொடுஞ்செயல் கண்டு ஆவேசமடைந்த கபிலர், மூன்று மன்னர்களையும் பாட்டில் சினப்பதாக, ஒரு பாடல் உண்டு, புற நானூற்றில்.

உயிரைக் கொடுத்த பாரி :

உயிரைக் கொடுத்த பாரி :

நீங்கள் அவனிடம் வந்து கேட்டிருந்தால், நீங்கள் வேண்டிய இந்த மலையை மட்டுமல்ல, தன்னையும்,தன்னோடு சேர்ந்த என்னையும் நீங்கள் கேட்காமலேயே கொடுத்திருப்பானே, என்று பாரியை, அவன் இறப்பிலும் அவன் கொடைத் திறனைப்போற்றி, உயரத்தில் வைக்கிறார்.

அருமை நண்பனின் இறப்பு அவரைத் துன்பத்தில் ஆழ்த்தி, தானும் மாண்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்தாலும், கொழுகொம்பில்லாத முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்த பாரியின் புதல்விகள், அவர்களைக் காக்க யாருமின்றித் தவிப்பதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறார்.

பாரி மன்னரின் இரு மகள்கள், அங்கவை மற்றும் சங்கவை. இந்த இரு இளம் பெண்களும் அரண்மனையில் இருந்தாலும், மக்களோடே இணைந்து வாழ்ந்தார்கள், அத்துடன் கவி புனையும் ஆற்றலும் உள்ளவர்கள், இவர்களின் பாடல்களும் புற நானூற்றில் காணக் கிடைக்கின்றன. தந்தை இறந்தபின், தங்கள் கையறு நிலையை எண்ணி இவர்கள் வடித்த பாடல்கள், கல் மனம் கொண்டோரையும் கரைய வைக்கும்.

இதனால், நண்பன் பாரியின் மகள்களை மணமுடித்துவைத்து, அவர்கள் வாழ்வினைக் காக்க வேண்டும் என்ற உறுதியுடன், நண்பனின் மகள்களுடன் நாட்டைவிட்டு வெளியேறுகிறார். பல மன்னர்களும், மூன்று மன்னர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று, அந்தப் பெண்களை மணமுடிக்க மறுத்துவிடுகிறார்கள்.

கடுமையாகப்போராடி, மலையமான் அரச குடும்பத்தில் உள்ள ஒரு அரசருக்கு, ஒரு பெண்ணை மணமுடிக்கிறார். மற்றொரு பெண்ணை, வேறொரு அரசனுக்கு மணமுடித்து, நட்பின் கடமைகளை நிறைவேற்றியபின், விண்ணுலகம் சென்று, நண்பனுடன் சேர, வடக்கிருந்து உயிர் துறக்கிறார் கபிலர்.

கபிலர் குன்று :

கபிலர் குன்று :

அவர் உயிர் துறந்த இடம், இன்று கபிலர் குன்று என்று வழங்கப்படுகிறது. திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள திருக்கோவிலூர் எனும் ஊரின் தென்பெண்ணை ஆற்றங்கரையில், அவர் தவம் இருந்த குன்றை இன்றும் காணலாம்.

வள்ளல் பாரி நல்லாட்சி செய்த பறம்புமலை, தற்காலத்தில் பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் உள்ளது இந்த மலை.

தன் பயன் கருதாமல், மற்றவர் துயர் போக்குவதே, இறை செயல், என்றெண்ணி வாழ்ந்த, பாரி மன்னன் இன்றில்லை!

இப்போதும், கொழுகொம்புகள் இல்லாமல் காற்றில் அல்லாடும் முல்லைச்செடிகள், காத்திருக்கின்றன.

தங்கள் பரிதவிப்பைப்போக்கி, நல்வாழ்வு அளிக்க, மீண்டும் ஒரு பாரி வருவார் என..!

Image source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Historical story of the King Paari

Historical story of the King Paari
Story first published: Tuesday, December 12, 2017, 17:24 [IST]
Desktop Bottom Promotion