வலிப்பு நோய் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

By Lakshmi
Subscribe to Boldsky

நம்மால் காக்காய் வலிப்பு என்று அழைக்கப்படும் இந்த வலிப்பு நோய் பற்றி நம்மிடம் பல மூட நம்பிக்கைகள் உள்ளன. இந்த மூட நம்பிக்கைகள் பல நேரங்களில் வலிப்பு நோய் வந்தவர்களுக்கு ஆபத்தாக கூட முடியும். எனவே வலிப்பு நோய் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், அனைவருமே இந்த வலிப்பு நோயை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

வலிப்பு நோய் என்பது மூளை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும். தலைவலிக்கு அடுத்து பெரும்பாலானவர்கள் இந்த வலிப்பு நோய்க்கு ஆளாகியுள்ளனர். 100 பேரில் ஒருத்தருக்கு இந்த வலிப்பு நோய் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. வருடம் தோறும் இந்த வலிப்பு நோய்க்கு 10 லட்சம் பேர் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடம், பொருள், ஏவல் பாராமல் திடீரென வரும் இந்த நோய் குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்கள் என யாரையும் விட்டு வைப்பதில்லை.. இந்த வலிப்பு நோய் என்பது என்ன? எப்படி உண்டாகிறது? இந்த வலிப்பு நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலிப்பு என்பது என்ன?

வலிப்பு என்பது என்ன?

வலிப்பு என்பது ஒரு நோய் என்று தான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் இந்த வலிப்பு என்பது ஒரு நோய் அல்ல.. இது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே..! மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு போன்ற காரணங்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு உண்டாகிறது

வலிப்பு எப்படி வரும்?

வலிப்பு எப்படி வரும்?

ஒருவருக்கு வலிப்பு வரும் போது கைகளும், கால்களும் இழுத்துக் கொண்டு துடிப்பார்கள். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியும். சுயநினைவை இழந்து விடுவார்கள். சில நிமிடங்களில் இது சரியாகி, அவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலையை அடைந்துவிடுவார். இதை தான் வலிப்பு என்று கூறுவார்கள். ஒருவருக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் இந்த வலிப்பு வந்திருந்தால், அவரை வலிப்பு நோய் தாக்கியுள்ளது என்று அர்த்தம்.

காரணம்?

காரணம்?

தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமி தொற்று, புழுத் தொல்லை, மூளை காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு உண்டாக காரணமாக அமையலாம்.

சிலருக்கு பரம்பரையாகவும் இந்த பிரச்சனை உண்டாகலாம். ஒரு சிலருக்கு மன அழுத்தம் காரணமாக இந்த வலிப்பு உண்டாகலாம். இந்த வலிப்பினை பொய் வலிப்பு என்று கூறுவார்கள். கர்ப்ப காலத்திலும் வலிப்பு உண்டாகலாம். பெரும்பாலும், பலருக்கு எந்த ஒரு காரணங்களும் இல்லாமல் வலிப்பு உண்டாகிறது.

பிறந்த குழந்தைக்கு வலிப்பு!

பிறந்த குழந்தைக்கு வலிப்பு!

பிறக்கும் பொழுது குழந்தைக்கு உண்டாகும் ஆக்ஸிஜன் குறைபாடுகள், குறை பிரசவம், பிரசவ காலத்தில் உண்டாகும் தொற்றுகள், பிரசவத்தின் போது தலையில் அடிபடுதல் போன்றவற்றாலும் குழந்தைக்கு வலிப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி, ரத்தத்தில் கால்சியம், குளுக்கோஸ், மக்னீசியம் அளவு குறைந்தாலும் வலிப்பு வரும்.

அதிகமாக குழந்தைகளுக்கு காய்ச்சலின் காரணமாக தான் வலிப்பு உண்டாகிறது. பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வருவது உறுதி. குழந்தை சூடத்தை சாப்பிட்டு விட்டாலும் கூட வலிப்பு உண்டாகும்.

வலிப்பின் வகைகள்

வலிப்பின் வகைகள்

மூளையில் எந்த பகுதியில் பாதிப்பு உள்ளதோ அந்த பகுதிக்கு தகுந்தது போல வலிப்புடைய தன்மை வேறுபடும். மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது பகுதி வலிப்பு (Partial seizure) எனப்படுகிறது.

ஒரு சிலருக்கு இந்த வலிப்புகள் உடல் முழுவதும் பரவி இருக்கும் இது‘முழுவீச்சு வலிப்பு' (Generalised seizure) எனப்படுகிறது. இந்த இரண்டு வலிப்புகளை தவிர மேலும் சில துணை வலிப்புகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்றபடி மருத்துவ சிகிச்சை முறையும் மாறுபடும்.

என்ன பரிசோதனை?

என்ன பரிசோதனை?

வலிப்பு நோய் உள்ளவர்கள், மூளை மற்றும் நரம்பியல் மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற வேண்டும். சில அடிப்படையான இரத்த பரிசோதனைகள், ஈ.ஈ.ஜி., ‘வீடியோ ஈ.ஈ.ஜி.', சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் (PET) ஸ்கேன், ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் போன்றவற்றை செய்வதுடன், வலிப்பின் வகை என்னவென்று கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சைகளையும் எடுக்க வேண்டும்.

சிகிச்சை என்ன?

சிகிச்சை என்ன?

இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்ப நிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில், 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்துவிடலாம்.

வாழ்நாள் முழுவதும் மாத்திரை?

வாழ்நாள் முழுவதும் மாத்திரை?

வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என அச்சப்படத் தேவையில்லை. மருந்து / மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்து, 3 ஆண்டுகள்வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் முழுவதுமாக நிறுத்திவிடலாம். மாத்திரைகளை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது. வலிப்புக்கான சிகிச்சையில் இதுதான் முக்கியம்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

2 முதல் 3 சதவீத நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் ‘மைக்ரோ அறுவை சிகிச்சை' தற்போது நடைமுறையில் உள்ளது. இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும்.

பாதுகாப்பான பிரசவம்..!

பாதுகாப்பான பிரசவம்..!

கர்ப்ப காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாலும், அனுபவம் வாய்ந்த சிறந்த மகப்பேறு மருத்துவரிடன் பிரசவம் பார்பதாலும், குழந்தைகளுக்கு பிறவியிலேயே வலிப்பு உண்டாவதை தடுக்கலாம். குழந்தைகளுக்கு காய்ச்சல் வராமலும், வந்தால் அது அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு வலிப்பு வராமல் பாதுகாக்கலாம்.

முன்னேச்சரிக்கை

முன்னேச்சரிக்கை

வலிப்பு வந்தவர்கள் விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க வேண்டியது முக்கியம். இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அடியில் இயங்கும் பணிகளில் ஈடுபடுவது, வாகனம் ஓட்டுவது போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும்.

வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, ஏரி, கிணறு, அருவி ஆகிய இடங் களில் குளிப்பதற்கும், நீர் நிலைகளின் அருகே விளையாடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது.

மது அருந்துதல்

மது அருந்துதல்

வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக்கூடாது. அப்படி அருந்தினால், வலிப்புக்கான மருந்து முழுவதுமாக வேலை செய்யாது.

மருத்துவரின் ஆலோசனை

மருத்துவரின் ஆலோசனை

வேறு ஏதேனும் நோய்க்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, வலிப்பு நோய்க்கான மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். மேலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

பொதுவாக வலிப்பு திடீரென்று தான் தோன்றும். ஆனாலும், அது வருவதற்கு முன்னர் சில அறிகுறிகள் தோன்றும். அவையாவன, திடீர் தலைவலி, உடல் சோர்வு, குழப்பமான மனநிலை, பதற்றம், பயம், வியர்த்தல், காதில் ஏதோ குரல் கேட்பது, கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை, உடலில் மதமதப்பு, நடை தடுமாற்றம் இது போன்ற அறிகுறிகள் வந்தால், வலிப்பு உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று படுத்து ஓய்வெடுப்பது நல்லது.

முதலுதவி

முதலுதவி

ஒருவருக்கு வலிப்பு வரப்போகிறது என்று தெரிந்தால், அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள். சட்டை பட்டன், பெல்ட் போன்றவற்றை தளர்த்தி காற்றோட்டமாக இருக்குமாறு செய்ய வேண்டும். ஃபேன் அல்லது விசிறி மூலம் காற்றை வர செய்யுங்கள்.

அவரது கண்ணாடி, பல் செட்டு போன்றவற்றை கழற்றி வைக்க வேண்டும். அருகில் ஏதேனும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

5 நிமிடங்களுக்கு மீற கூடாது

5 நிமிடங்களுக்கு மீற கூடாது

ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம். அதன்பின், சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள். வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

செய்ய கூடாதவை

செய்ய கூடாதவை

கூட்டம் கூட கூடாது. வலிப்பு வந்தவரின் கை, கால்களை அழுத்தி பிடிக்க கூடாது. வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது. அவருக்கு சுய நிலை திரும்பி விட்டது என்பதை உறுதி செய்து விட்டு குடிப்பதற்கு ஏதாவது கொடுக்கலாம். பொதுவாக நாம் வலிப்பு வந்தவரிடம் சாவி கொத்தை கொடுப்போம். இதனால் எந்த ஒரு பலனும் இல்லை.. மூக்கில் வெங்காய சாறை பிழிந்து விடுவது, செருப்பை நுகர செய்வது போன்றவைகள் கூடவே கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    You Should Know about Epilepsy

    You Should Know about Epilepsy
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more