ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!'

Roasted Chickpeas Benefits In Tamil: அதிகரித்து வரும் நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளால், என்ன தான் பரபரப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தாலும் தற்போது மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீதான அக்கறை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஒவ்வொருவருமே தாங்கள் உண்ணும் உணவின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். அதுவும் சமீப காலமாக கார்டியாக் அரெஸ்ட், மாரடைப்பு போன்ற இதய நோயால் ஏராளமானோர் இறப்பதைக் காணும் போது, பலரும் தங்கள் ஆரோக்கியத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

Doctor Lists The Top 6 Health Benefits Of Eating A Handful Of Roasted Chickpeas

பொதுவாக இதய நோயானது ஒருவருக்கு ஒரே நாளில் வந்துவிடுவதில்லை, நாம் உண்ணும் மோசமான உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் உடலில் கொலஸ்ட்ரால் கொஞ்சம் கொஞ்சமாக படியத் தொடங்கி, உடலினுள் அழற்சி அதிகரித்து, நாளடைவில் இதய நோய்க்கு வழிவகுக்கிறது. எனவே நாம் உண்ணும் உணவுகளில் முதலில் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

குறிப்பாக சாப்பிடும் ஸ்நாக்ஸில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஸ்நாக்ஸ் என்றாலே பஜ்ஜி, போண்டா, வடை, பக்கோடா என்று எண்ணெயில் பொரித்தவற்றையே பலரும் தேர்ந்தெடுத்து உட்கொள்கின்றனர். ஆனால் இதைத் தவிர அற்புதமான மற்றும் சுவையான சில ஸ்நாக்ஸ்களும் உள்ளன. அதில் ஒன்று தான் உப்புக்கடலை.

உப்புக்கடலை என்பது கருப்பு கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வறுத்தால் கிடைப்பதாகும். இந்த உப்புக்கடலையை தினமும் ஒரு கையளவு ஸ்நாக்ஸ் வேளையில் உட்கொண்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த நன்மைகள் என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

1. எலும்புகளுக்கு நல்லது

"உப்புக்கடலையில் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது" என்று கூறினார். எனவே உங்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் உப்புக்கடலையை ஸ்நாக்ஸ் வேளையில் ஒரு கையளவு சாப்பிடுங்கள்.

2. எடை இழப்புக்கு உதவும்

நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, பசி எடுக்கும் வேளையில் என்ன ஸ்நாக்ஸ் சாப்பிடுவது என்று தெரியவில்லையா? அப்படியானால் உப்பக்கடலையை சாப்பிடுங்கள். "உப்புக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகமாக உள்ளன. இவ்விரண்டும் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். எனவே எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகச்சிறந்த ஸ்நாக்ஸ்" என்று டாக்டர் கூறினார்.

3. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உணவுகளானது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். எனவே சர்க்கரை நோயாளிகள் நிறைய பேருக்கு எதை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம் என்ற ஒரு கேள்வி இருக்கும். "உப்புக்கடலையில் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் தன்மை என்பது குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு அருமையான ஸ்நாக்ஸ்" என்று டாக்டர் கூறினார்.

4. இதயத்திற்கு நல்லது

"உப்புக்கடலையில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகமாக உள்ளன. எனவே இதய நோய் உள்ளவர்கள் ஸ்நாக்ஸாக உப்புக்கடலையை சாப்பிடுவது நல்லது. முக்கியமாக இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது" என்று டாக்டர் கூறினார்.

5. புற்றுநோயைத் தடுக்கும்

தற்போது புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி புற்றுநோய் அதிகரிப்பதற்கு உண்ணும் உணவுகளும் ஒரு முக்கிய காரணம். ஆனால் "உப்புக்கடலையானது புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். ஏனெனில் உப்புக்கடலையானது நமது உடலில் நல்ல கொழுப்பு அமிலமான பிட்யூரேட்டை தயாரிக்க உதவி புரிந்து, புற்றுநோயைத் தடுக்கும்" என்று டாக்டர் கூறினார்.

6. மூளை ஆரோக்கியம் மேம்படும்

உங்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமா? மேலும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? அப்படியானால் "உப்புக்கடலையில் இருக்கக்கூடிய மெக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற தாதுக்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது" என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.

எனவே ஸ்நாக்ஸ் வேளைகளில் கண்டதை சாப்பிடாமல் டாக்டர் கார்த்திகேயன் சொல்வது போன்று ஒரு கையளவு உப்புக்கடலையை சாப்பிடுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படும், சுவையும் பிரமாதமாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, July 17, 2026, 13:19 [IST]
Desktop Bottom Promotion