4 முட்டை இருந்தா இந்த முட்டை தேங்காய் குழம்பை ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும்

Posted By:

Egg Coconut Curry Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே மாதிரி குருமா அல்லது பொரியல்தான் செய்வீர்களா? முட்டையை இப்படி ஒரேமாதிரி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் ஒருமுறை முட்டையை வைத்து இந்த முட்டை தேங்காய் குழம்பை செய்யுங்கள். இந்த முட்டை தேங்காய் குழம்பு சாதம், சப்பாத்தி, பூரி, தோசை என அனைத்திற்கும் செம காம்பினேஷனாக இருக்கும்.

Egg Coconut Curry Recipe How to Make at Home in Tamil

இந்த முட்டை தேங்காய் குழம்பு நீங்கள் வழக்கமாக சாப்பிடும் குழம்பு போல இருக்காது. இப்படி வித்தியாசமான முட்டை மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த முட்டை தேங்காய் குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை தேங்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தேங்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- முட்டை - 4
- உருளைக்கிழங்கு - 1
- தேங்காய் - ½ மூடி
- பெரிய வெங்காயம் - 1
- கசகசா - ½ டீ ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய்த்தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1¼ டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகுத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- மஞ்சள்தூள் - ¼ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ¼ டீ ஸ்பூன்
- புளி - 1½ டீ ஸ்பூன்
- பூண்டு - 2 பல்
- இஞ்சி - ½ இன்ச்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க தேவையானவை:

- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - ½
- கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

- முதலில் முட்டையின் மேற்பகுதியை தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு, பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

- முட்டை வெந்ததும் எடுத்து குளிர்ந்த நீரில் சேர்க்காமல், அப்படியே ஆற வைத்து, பின் தோல் உரித்து சுத்தம் கொள்ளவும். பின் முட்டையின் மேற்பரப்பில் நீளவாக்கில் கத்தியால் கீறி தனியே வைத்து கொள்ளவும்.

- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை நீக்க நன்றாக கழுவி விட்டு ஒரு வெங்காயத்தை ஒன்றிரண்டாக வதக்குவதற்கு ஏற்ப நறுக்கி கொள்ளவும். ½ வெங்காயத்தை தாளிப்பதற்கு ஏற்ப மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி விட்டு பின் பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியின் மேற்பரப்பில் இருக்கும் நார் மற்றும் ஓடுகளை நீக்கிவிட்டு தண்ணீரில் லேசாக அலசி எடுத்து வைக்கவும்.

- தேங்காயை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை மண் இல்லாமல் அலசி விட்டு தோலை சீவி பின் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அளவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். பின் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், மற்றும் கசகசா கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

- அதனுடன் நறுக்கிய தேங்காய், இஞ்சி, புளி மற்றும் தோல் உரித்து வைத்த பூண்டு சேர்த்து தேங்காய் பொன்னிறமாக மாறி நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.

- கடைசியாக அதில் காஷ்மீரி மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், மற்றும் கரம் மசாலா சேர்த்து சில நிமிடங்களுக்கு நன்கு கிளறி அடுப்பை அணைத்து ஆற விடவும்.

- பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்களை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்கவும். பின் தேவைக்கு ஏற்ப தண்ணீரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.

- அதே வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். பின் அதில் கருவேப்பிலை மற்றும் தாளிக்க நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின் அதனுடன் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, அதனுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறவும்.

- குழம்பு சிறிது கெட்டியாக இருக்கும்படி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசம் நீங்கி உருளைக்கிழங்கு நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.

- பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்து வைத்த முட்டையை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான முட்டை தேங்காய் குழம்பு ரெடி! இது சாதத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 28, 2026, 22:48 [IST]
Desktop Bottom Promotion