பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மலாய் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Malai Chicken Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலும் காலையில் பூரி, சப்பாத்தி தான் செய்வீர்களா? அப்படி செய்யும் போது அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கனை தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் சிக்கன் கிரேவியை தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

அதுவும் சற்று க்ரீமியாக ஹோட்டல் ஸ்டைலில் சிக்கனை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியென்றால் மலாய் சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு அல்டிமேட்டாக இருக்கும். முக்கியமாக இந்த சைடு டிஷ் செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Malai Chicken Gravy How To Make Creamy Malai Chicken Curry Recipe

உங்களுக்கு மலாய் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* முந்திரி - 10-15

ஊற வைப்பதற்கு...

* சிக்கன் - 1/2 கிலோ
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* வறுத்த சீரகத் தூள் - 3/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* ஊற வைத்த சிக்கன்
* அரைத்த விழுது
* தண்ணீர் - சிறிது
* பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முந்திரி சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தயிர், வறுத்த சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி பிரட்டி மூடி வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மலாய் சிக்கன் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 29, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion