40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை!

Diet Tips In Tamil: நாம் என்ன சாப்பிடுகிறோமோ அப்படி தான் நமது உடல் ஆரோக்கியமும் இருக்கும். அதுவும் ஒருவர் 40 வயதை எட்டிய பின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அப்படி செய்வதன் மூலம், உடலில் ஏற்படும் கொலஸ்ட்ரால், பிபி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம். நீங்கள் 40 வயதிலும் 20 வயதில் இருந்த உடல் வலிமையைப் பெற வேண்டுமா? அப்படியானால் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். எப்படிப்பட்ட உணவுமுறையை பின்பற்ற வேண்டும் என்பது தெரியவில்லையா?

Diet Tips Doctor Shares A Diet Chart You Must Strictly Follow After Age 40

உங்களுக்காகவே டாக்டர். பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 வயதுக்கு மேல் கட்டாயம் ஃபாலோ பண்ண வேண்டிய 'டயட் சார்ட்'குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் காலை, மதியம், இரவு நேரங்களில் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பன குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். இந்த டயட் சார்ட்டை ஒருவர் தவறாமல் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரு மாற்றத்தைக் காணலாம். இப்போது அந்த டயட் சார்ட் என்னவென்பதைக் காண்போம்.

காலை உணவு

* "காலை உணவை 8-9 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இட்லி, தோசையாக இருந்தால் சாம்பார் பெஸ்ட், சப்பாத்தியாக இருந்தால் குருமா சிறந்தது. இதில் முக்கியமான விஷயம் நிறைய காய்கறிகளை அள்ளிப் போட்டு சாம்பார், குருமாவை செய்ய வேண்டும்.

* 70 சதவீதம் காய்கறிகளையும், 30 சதவீதம் இட்லி, தோசை, சப்பாத்தியையும் சாப்பிட வேண்டும். இப்படி செய்யும் போது, அது ஒரு சரிவிகித உணவாக மாறும். உடலுக்கு நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை கிடைக்கும்.

* சம்பா ரவை, கோதுமை ரவை போன்றவற்றையும் காலையில் உப்புமா அல்லது கிச்சடியாக செய்து சாப்பிடலாம். அதுவும் அத்துடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வேக வைத்த காய்கறிகளை சாலட்டுகளாக செய்தும் சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைக்கருவை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் போட்டோ சாப்பிடலாம்." என்று கூறினார்.

11 மணியளவில்..

"மதிய உணவிற்கு முன் பசி எடுத்தால், அப்போது ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு போன்றவற்றை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட் போன்று தயாரித்தும் உட்கொள்ளலாம்." என்று டாக்டர் கூறினார்.

Diet Tips Doctor Shares A Diet Chart You Must Strictly Follow After Age 40

மதிய உணவு

* "மதிய உணவின் போது சாதத்தை சாப்பிடலாம். முடிந்த வரை பழங்காலத்தில் பயன்படுத்திய கருப்பு கவுனி அரிசி, கைக்குத்தல் அரிசி, தானிய வகைகள் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம். வாரத்திற்கு 1-2 நாட்கள் வெள்ளை அரிசி சாதத்தை சாப்பிடலாம்.

* எந்த குழம்பு வைத்தாலும், அதில் காய்கறிகளை அதிகம் சேர்த்து, அவற்றை சாப்பிட வேண்டும்.

* பொரியல் செய்யலாம், ஆனால் அவற்றில் அதிக அளவு எண்ணெய் சேர்க்காமல் சமைக்க வேண்டும்.

* பருப்பை கெட்டியாக வேக வைத்து, தால் போன்றும் சாப்பிடலாம். இதன் மூலம் நிறைய புரோட்டீன் உடலுக்கு கிடைக்கும்.

* கடைசியாக மதிய உணவில் ஒரு கப் கெட்டி தயிர் வேண்டும். இதன் மூலம் புரோபயோடிக் உடலுக்கு கிடைத்து, அல்சர் வராமல் இருக்கும்.

* அசைவ பிரியராக இருந்தால், க்ரில் செய்த சிக்கன் அல்லது மீன் சாப்பிடலாம். கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். இப்படியான உணவுமுறையை பின்பற்றும் போது காய்கறிகள் மூலம் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் கிடைக்கும், முட்டையில் இருந்து புரோட்டீன் கிடைக்கும், மீன்களில் இருந்து ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும்." என்று டாக்டர் கூறினார்.

மாலை வேளை

"மாலை வேளையில் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ, ப்ளாக் டீ, ப்ளாக் காபியை குடிக்கலாம். சைடு டிஷ்ஷாக வேக வைத்த கருப்பு சுண்டல், பச்சை பயறு போன்றவற்றை சாப்பிடலாம்." என்று டாக்டர் கூறினார்.

Diet Tips Doctor Shares A Diet Chart You Must Strictly Follow After Age 40

இரவு உணவு

* "40 வயதிற்கு மேல் உடல் எடையை கட்டாயம் குறைக்க வேண்டும். உடலின் ஆற்றலை, வலிமையை அதிகரிக்க வேண்டும். இதற்கு இரவு உணவு பெரிதும் உதவி புரியும். இந்த இரவு உணவை 8-9 மணிக்குள் முடித்து விட வேண்டும்.

* இரவு உணவின் போது 2 சப்பாத்தி சாப்பிட்டால் நிறைய காய்கறிகளை சேர்த்த குருமாவை சைடு டிஷ்ஷாக எடுக்க வேண்டும். அதுவும் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு, 2 சப்பாத்தியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

* இல்லாவிட்டால் வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் காய்கறி சாலட்டை உட்கொள்ளலாம். வேண்டுமானால் வெஜ், நான்-வெஜ் என எந்த சூப்பையும் குடிக்கலாம்.

* இரவு உணவுக்கும், தூங்குவதற்கும் இடையே 2 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். மேலும் சாப்பிட்ட பின் ஒரு 20 நிமிடம் மைல்ட்டான வாக்கிங் மேற்கொள்ள வேண்டும். இதனால் இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

* மஞ்சள் தூளை பாலில் போட்டு நன்கு சுண்ட காய்ச்சி குடித்து வரும் போது, 40 வயதிற்கு மேல் சந்திக்கும் வலிகள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்." என்று டாக்டர் பிள்ளை கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, May 11, 2026, 11:38 [IST]
Desktop Bottom Promotion