உணவில் உள்ள முழு சத்துக்களை பெற வேண்டுமா? அப்ப இப்படி சாப்பிடுங்க.. கூறும் ஹெல்த் கோச்!

Powerful Food Combinations In Tamil: நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறோம். ஆனால் வெறும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டும் உடல் ஆரோக்கியம் மேம்படுமா என்றால் நிச்சயம் இல்லை. எப்பேற்பட்ட ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அதை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே அதில் உள்ள முழு சத்துக்களைப் பெற முடியும்.

5 Powerful Food Combinations a Health Coach Recommends for Maximum Health Benefits

அதாவது ஒரு உணவில் உள்ள முழு சத்துக்களைப் பெற அந்த உணவை சரியான மற்றொரு உணவுடன் சேர்த்து உட்கொண்டால் தான், உடலால் அந்த சத்துக்களை சரியாக உறிஞ்சி உடலுக்கு வழங்க முடியும். எனவே வெறுமனே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமல், சரியான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள்.

இதுக்குறித்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் ஹெல்த் கோச்சான ஸ்ரீ லாவண்யா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில உணவு சேர்க்கைகள் குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும், அதில் அவர் கூறியதாவது, "ஆரோக்கியமாகச் சாப்பிடுவது என்பது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பற்றியது மட்டுமல்ல, அதை எப்படிச் சேர்த்துச் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பற்றியதுமாகும்.

சரியான உணவுச் சேர்க்கைகள், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கணிசமாக மேம்படுத்தவும், ஹார்மோன் சமநிலையைப் பேணவும், செரிமானத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவும். சரியான ஊட்டச்சத்துக்களை இணைப்பதன் மூலம், அன்றாட உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் ஆதரவளிப்பதில் அதிக செயல்திறன் மிக்கவையாக மாறுகின்றன." என்று கூறியிருந்தார். இப்போது அவர் கூறிய உணவுச் சேர்க்கைகள் குறித்து காண்போம்.

1. கீரைகள் + வைட்டமின் சி உணவுகள்

"கீரைகளை எப்போது சாப்பிட்டாலும், அத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்து உட்கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது கீரையில் உள்ள இரும்புச்சத்து மூன்று மடங்கு உடலுக்கு கிடைக்க வேண்டுமானால், இந்த வைட்டமின் சி மிகவும் அவசியம்" என்று கூறினார்.

2. கேரட் + நெய்

"நீங்கள் வெறும் கேரட்டை மட்டும் சாப்பிடுவீர்கள் என்றால், இனிமேல் கேரட்டுடன் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுங்கள். ஏனெனில் அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ-யை பீட்டா கரோட்டீனாக மாற்றி உடலில் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவும் மற்றும் சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்" என்று கூறினார்.

3. க்ரீன் டீ + எலுமிச்சை

"தினமும் க்ரீன் டீ குடிப்பீர்களா? அப்படியானால் வெறும் க்ரீன் டீயை மட்டும் குடிக்காமல், அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடியுங்கள். இதனால் எலுமிச்சை க்ரீன் டீயில் உள்ள கொழுப்பை எரிக்கும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், இன்சுலின் சென்சிடிட்டிவிட்டிக்கும் உதவி புரியும்" என்று கூறினார்.

4. சியா விதைகள் + யோகர்ட்

"சியா விதைகளை எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு பதிலாக, யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் ப்ரீ பயோடிக்ஸ் மற்றும் ப்ரோ பயோடிக்ஸ் ஒன்று சேரும் போது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் நன்கு மீண்டும் உருவாகும், இன்சுலின் சென்சிட்டிவிட்டியும் சிறப்பாக இருக்கும் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சமநிலையில் இருக்கும்" என்று கூறினார்.

5. மாதுளை + நட்ஸ்

"மாதுளம் பழத்தை எப்போது சாப்பிட்டாலும், அத்துடன் சிறிது நட்ஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் ஒரு சக்திவாய்ந்த ஒன்றாகும். இது கருத்தரித்தல் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு மிகவும் ஆதரவாக இருக்கும்" என்று கூறினார்.

எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் இப்படி சாப்பிட்டதில்லை என்றால், இனிமேல் சரியான முறையில் உட்கொண்டு, அதில் உள்ள சத்துக்களையும், நன்மைகளையும் முழுமையாக பெற முயற்சி செய்யுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, June 2, 2026, 11:41 [IST]
Desktop Bottom Promotion