For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இதுக்கு மேலயும் உன்ன மன்னிக்க முடியாது! my story # 245

  |

  அன்றாட குடும்ப நிகழ்வுகளில் எத்தனை களேபரங்களை கடந்து வரவேண்டியிருக்கிறது தெரியுமா? ஒவ்வொரு தங்கள் வாழ்நாளில் இது போன்ற சந்தர்ப்பங்களை எல்லாம் கடந்து வந்திருப்பீர்கள். சில நேரங்களில் அதே சம்பவத்தை திரையில் காணும் போது.... அது என்னுடைய வாழ்க்கை, அதே சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது என்று நினைவுகூர்வோம்.

  திரையில் பார்ப்பது எல்லாவற்றையும் யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நடந்த,நடக்கிற உண்மை சம்பவங்களாக பார்ப்பதினால் தான் அது நம் மனதில் பெரும் போராட்டங்களை ஏற்படுத்துகிறது. சினிமாவை விடுங்கள் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் எதையோ ஒன்றை நினைத்து ஆரம்பிக்க அது அப்படியே நாம் எதிர்ப்பார்த்ததற்கு தலைகீழான முடிவைக் கொடுத்திருக்கும்.

  இந்த விஷயம் எதில் பொருந்துகிறதோ இல்லையோ திருமணம் என்ற விஷயத்தில் கச்சிதமாக பொருந்தும். இங்கே அனைவரது வாழ்க்கையையும் இரண்டு விதமாக பிரிக்கலாம் ஒன்று திருமணத்திற்கும் முன் இன்னொன்று திருமணத்திற்கு பின். பொறுப்புகள் எதுவும் இல்லாத காலத்தில் நாமாகவே வழிய திணித்துக் கொள்கிற ஓர் பிரச்சனை தான் காதல். நிச்சயமாக காதலை அணுகும் போது அதனை ஓர் பிரச்சனையாகவோ அல்லது வாழ்நாள் முழுவதும் மனதில் தங்கிவிடக்கூடிய ரணமாகவோ நான் நினைக்கவில்லை.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  எங்கள் குடும்பம் :

  எங்கள் குடும்பம் :

  எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பேர் நான் அம்மா அப்பா அண்ணன். அப்பாவிற்கு சுமாரான வருமானம் தான். அம்மா வீட்டிலேயே சின்ன சின்ன கூலி வேலைகளை செய்து அவ்வப்போது அப்பாவிற்கு மாசக்கடையில் கை கொடுப்பார்.

  இருவருக்கும் தங்கள் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம். அதற்காக அடிக்காமல் எல்லாம் இருக்கமாடார்கள் இருவரும் சரமாரியாக வெளுத்து வாங்குவார்கள்.

  பதநீர் :

  பதநீர் :

  சுமாரான பள்ளியில் தான் படிக்க வைத்தார்கள். அண்ணனுக்கும் எனக்கும் இரண்டு வயது தான் வித்யாசம் என்பதால் இருவரும் எப்போதும் கூட்டுக் களவாணிகளாகவே சுற்றிக் கொண்டிருப்போம். ஒரு விடுமுறை நாளில் ஊரில் இருந்த சிறுவர்களுடன் சேர்ந்து மரம் ஏறி நுங்கு பறித்து சாப்பிடலாம் என்று திட்டம்.

  பாதி மரம் ஏறிய பிறகு தான் மேலே பாம்பு இருந்தால் என்ன செய்வது, நுங்கை நம்மால் வெட்ட முடியுமா? எப்படி இறங்குவது என்று ஏகப்பட்ட பயம். தெரியாத்தனமாக மேலிருந்து கீழே பார்த்துவிட்டேன் அவ்வளவு தான் தலை சுற்ற ஆரம்பித்தது. கால் நடுங்க ஆரம்பித்தது. டேய் கீழ பாக்காம அப்டியே ஏறிடு.... கீழ பாக்காத போ போ என்று கீழிருந்து அண்ணனும் இன்னும் சிலரும் கத்தினார்கள்.

  அப்பா :

  அப்பா :

  டேய் இங்க என்னடா பண்றீங்க என்று சைக்களை மிதித்தபடி அப்பா வந்து கொண்டிருந்தார். அப்பாவை பார்த்ததும் அண்ணனைத் தவிர பிறர் ஓட்டம் பிடித்தனர். அதற்குள் அப்பா நான் ஏறிய மரத்திற்கு அருகில் வந்துவிட்டார்.

  என்னடா இவ்ளோ தெலைவுக்கு வந்து விளையாடுறீங்க வீட்ல அம்மா தேடுவா.... இம்புட்டு தூரம் எல்லாம் வரக்கூடாது ஓடு வீட்டுக்கு என்றார். டேய் உன் கூட தான சின்னவனும் சுத்துவான் அவன் எங்க? என்றார். அண்ணனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நான் வேணாந்தாப்பா சொன்னேன் அவன் தான் அடம் புடிச்சான் என்று அழ ஆரம்பித்தான். அழுது கொண்டே மேலே கைகாட்ட அப்பா அண்ணாந்து பார்த்தார். மரத்தின் நடுவே பல்லியை போல மரத்தை தொற்றிக் கொண்டிருந்தேன்.

   இருடா அப்பா வர்ரேன் :

  இருடா அப்பா வர்ரேன் :

  பார்த்த மாத்திரத்தில் அப்பா சைக்கிளை கீழே போட்டுவிட்டு மரமேற ஆரம்பித்தார். அப்பா வரும் வேகத்தை பார்த்து மரம் ஏறியதற்காக என்னை அடிக்கத்தான் வருகிறார் என்று நினைத்து அப்பா பயமா இருக்குப்பா.... வராதப்பா வராதப்பா என்று கத்தி அலறினேன்.

  தம்பி கைய விட்றாத அப்பா புடிச்சிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே என் காலுக்கு அருகில் வந்து விட்டார். ஒரு கையில் மரத்தை பிடித்துக் கொண்டு அப்டியே கீழ வா விழ மாட்டா அப்பா பிடிச்சுக்குறேன் கொஞ்சம் கீழ இறங்கு என்றார். இரண்டு அடி கீழே நகர்ந்திருப்பேன். வேட்டியை அவிழ்த்து என்னை தன் உடலோடு கட்டிக் கொண்டார். கண்ண மூட்றா என்று சொன்னவர் சரசரவென்று கீழே இறங்கினார்.

  நான் இறுக்கமாக அப்பாவை கட்டிக் கொண்டேன். இறங்கியதும் அடி ஏதும் பட்டிருக்கா என்று சொல்லி கை கால்களை தேய்த்து விட்டபடி வேட்டியை கட்டிக் கொண்டார். பதனீ வேணும்னா அம்மாட்ட கேட்டிருக்கலாம்லடா....

  அப்பா நுங்கு பறிச்சத்தரேன் திண்ணுட்டே வீட்டுக்கு போங்க என்று சொல்லி மீண்டும் மரமேறி நுங்கு பறித்துப் போட்டார். அதை கீழே இறங்கி வெட்டியும் கொடுத்தார்.

  நாங்கள் பள்ளி படிப்பு முடிக்கும் வரையிலும் எங்களுக்கான சின்ன சின்ன விஷயங்களை கூட கவனமெடுத்துச் செய்வார். எங்கள் இருவரையும் பள்ளியில் சென்று விடுவதையும் அழைத்து வருவதையும் மிகப்பெரிய சாதனையாகவே நினைத்துச் செய்தார் அப்பா.

  கால மாற்றம் :

  கால மாற்றம் :

  காலங்கள் ஓடியது. கல்லூரி படிக்க வெளியூருக்கச் சென்றோம். அண்ணனும் நானும் இன்ஜினியரிங் படித்தோம். மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ தான் வீட்டிற்கு வருவோம். வரும் போதெல்லாம் அம்மா தடபுடலாக விருந்து சமைத்து வைப்பாள்.

  முற்றத்தில் படுத்துக் கொண்டு அம்மாவிடம் ஊர்புரணிக்கதைகளை கேட்பது தான் என்னுடைய பொழுது போக்கு வயது முதிர்வினால் அப்பாவினாலும் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை.

  அண்ணி :

  அண்ணி :

  அண்ணனுக்கு திருமணம் நடந்தது. அண்ணி அம்மா வழியில் உறவினர் பெண் தான் என்பதால் திருமணம் உடனேயே முடிந்து விட்டது. அண்ணனுக்கு தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்திருந்தது. பதினைந்தாயிரம் மாதச் சம்பளம். அம்மாவும் அப்பாவும் அண்ணனுடனே இருந்தார்கள். இதில் அண்ணிக்கு கொஞ்சம் மனஸ்தாபம். போதாகுறைக்கு நானும் வேலை வெட்டிக்குச் செல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன்.

  இந்நிலையில் தான் அரசல் புரசலாக என் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய ஆரம்பித்தது. வேலைக்கு போய் சம்பாதிக்க துப்பில்ல இது காதல் கன்றாவி ஒண்ணு தான் குறை என்று அண்ணி என்னைத் திட்ட அப்பா பார்த்து விட்டார்.

  ஊருக்கே போய்டலாம் :

  ஊருக்கே போய்டலாம் :

  நாங்க வாழ்ந்து முடிச்சவங்க பக்குவப்பட்டுட்டோம் ஆனா நீ இனிமே தான் வாழணும் எல்லாரும் உன்னைய பெத்தவக மாதிரி பாத்துக்க மாட்டாங்க வா தம்பி நம்ம ஊருக்கே போய்டலாம் என்று குரலுடைந்து அப்பா பேசிய அந்த இரவு இன்னமும் என் நியாபகத்தில் இருக்கிறது.

  இவ்வளவு பேசிய அப்பா காதலிக்கும் பெண்ணைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் கேட்பார் என்று எதிர்ப்பார்த்தேன் ஆனால் கேட்கவில்லை. ஏன்ப்பா.... அண்ணி பேசுனதால தான ஊருக்கே போய்டலாம்னு சொன்னீங்க .... அப்டி இல்லடா எனக்கும் இங்கு இருந்துட்டு ஒரு வேலையும் ஓடல ஊர்லன்னா அங்க இங்கன்னு சுத்திட்டு இருப்பேன் அதோட பாவம் அதுவும் சின்னபுள்ள தான புருஷனோட சந்தோசமா இருக்கணும்னு ஆசை இருக்காதா என்று சொல்லிவிட்டார். அண்ணன் முதலில் மறுத்தான் பின்னர் நாங்கள் மீண்டும் ஊருக்கே செல்ல சம்மதித்து விட்டான்.

  அப்பாவுடன் ரேசனுக்கு, கரண்ட் பில் கட்ட என்று அதே சைக்கிளில் அப்பாவை பின்னால் உட்கார வைத்து ஓட்ட ஆரம்பித்தேன். அப்போது தான் முதல் முறையாக நான் வளர்ந்துவிட்டேன் என்று உணர்ந்து கொண்டேன்.

  அவள் :

  அவள் :

  படிப்பு முடிந்து ஓராண்டு ஆகியிருந்தது. திடீரென்று ஒரு நாள் என் வீட்டிற்கு வந்துவிட்டாள் என் காதலி வீட்ல மாப்ள பாக்குறாங்க இனிமேலும் என்னால காத்திட்டு இருக்க முடியாது என்று சொல்லி என்னை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

  நல்ல வேலையாக அப்பா வீட்டில் இல்லை அம்மா மட்டும் தான் இருந்தார் அம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. யார்ரா இவ? இந்நேரத்துக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்கா என்றதோடு நிறுத்திக் கொண்டார்.

  நானும் மவுனமாகவே இருந்தேன். உன்னைய எவ்ளோ நம்பினேன் நான் இவ்ளோ தூரம் வந்த பிறகும் கூட இவ்ளோ அமைதியா இருக்க என்னைய கலட்டி விடலாம்னு பாக்குறியா? என்று கத்தினாள்.

  கௌரவம் :

  கௌரவம் :

  இல்லடி இன்னும் எனக்கு வேலையே கிடைக்கல அதுக்குள்ள எப்டி.... என்னனு சொல்லி உங்க வீட்ல பொண்ணு கேக்குறது உங்க அப்பன் யோசிக்கமாட்டானா என்றேன்.... இருவரும் கையறு நிலையில் இருந்தோம். சரி போ நான் நிச்சயம் உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரேன் என்று அனுப்பினேன்.

  அம்மா உங்களப்பத்தி இவன் நிறைய சொல்லியிருக்கான். நாங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம் என்னைய ஏத்துக்கங்கம்மா என்று சொல்லி அம்மா காலில் விழுந்துவிட்டாள். முதல் மருமகளின் வசவு பேச்சுக்கு பழகிப் போயிருந்த அம்மா இவளின் வார்த்தைகளில் விழுந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். எந்திரிம்மா..... என் புள்ளைய இவ்ளோ நேசிக்கிற உன்னைய விட்டுட்டு வேற ஒருத்திய தேடுவேனா நானு என்றார்.

  விவகாரம் அப்பாவிற்கும் அண்ணனுக்கும் சென்றது.

  என்ன கேக்கமாட்டியாப்பா :

  என்ன கேக்கமாட்டியாப்பா :

  அம்மாவின் நச்சரிப்பால் அப்பா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அண்ணன் ஒப்புக் கொள்ளவேயில்லை அவங்க சாதி என்ன நம்ம சாதி என்ன ஊர்ல தல காட்ட வேண்டாமா....

  அவன் தான் வெக்கமில்லாம அவக வீட்டுப் புள்ளைப் போய் காதலிச்சான்னு சொன்னா நீங்களும் அப்டி மண்டைய ஆட்டுவீங்களா?

  இந்த கல்யாணம் மட்டும் நடந்துச்சு நடக்குறதே வேற என்று கத்தினான் அண்ணன். பெரும் குழப்பம், இவ்ளோ நடக்குது நீங்க ஏன்ப்பா அந்த பொண்ணப் பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்க மாட்றீங்க.... உங்களுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா என்றேன்.

  உனக்கு என்கிட்ட சொல்ல விருப்பமில்லாத விஷயத்த நான் ஏன் தம்பி வம்பா வந்து கேக்கணும்.... நீ நினச்சிருந்தா அந்த புள்ளைய பாத்த அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருந்திருக்கலாம்...

  விடுங்க இப்போ நடக்க வேண்டியத பாருங்க இது உன் வாழ்க்கை அப்பா சொன்னாரு அண்ணன் சொன்னாருன்னு எதையும் மாத்திக்காத அந்த புள்ளைய தான் புடிச்சிருக்குன்னு சொன்னா தாரளமா கட்டிக்கோ என்றார்.

  வேலை :

  வேலை :

  இன்ஜினியரிங் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும் பராவாயில்லை பெயருக்காவது ஒரு வேலை வேண்டும் என்று சொல்லி அழைந்தேன்.

  காத்துக் கிடந்தேன், நூற்றுக்கணக்கான நேர்காணல்களை அட்டெண்ட் செய்தேன். பல நிலைகளைக் கடந்த நேர்காணல் வரை சென்று விட்ட பிறகு தேர்வான விவரம் பின்னர் கால் செய்து சொல்கிறோம் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.

  கிடைத்த வேலையை செய்து ஒரு வேலையை தேடிக் கொண்டு தான் ஊர்பக்கம் போவேன் என்ற வைராக்கியத்தோடு அப்பாவிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.

  வாழ்க்கை :

  வாழ்க்கை :

  இங்கே ஒவ்வொரு நாளையும் கடத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கிறதே அதை பெரும்பாலான பேச்சுலர்கள் பட்டிருப்பார்கள். நண்பனின் அறையில் ஓசியில் ஒட்டிக் கொண்டேன் அதுவே பத்துக்கு பத்து ஒற்றை அறை அதில் நான்கு பேர் வரை தங்கியிருந்தார்கள்.

  நான் செருப்பு வைக்கும் இடத்திற்கு அருகில் படுத்துக் கொள்வேன்.கையில் காசிருக்காது நண்பர்களிடம் கேட்கவும் கூச்சமாய் இருக்கும் இதனாலேயே பல கிலோமீட்டர்களுக்கு நடந்து செல்வது, நாள் முழுவதும் பட்டினியாய் கிடப்பது என வாடி வதங்கியிருக்கிறேன்.

  உணவுக்கே பஞ்சப்பாடு படும் வேலையில் காதலியையும்,காதலையும் நினைத்துப் பார்க்க முடியுமா? அப்படியே நினைத்தாலும் வருத்தப்படத்தான் முடிந்ததே தவிர அவர்களும் என்னோடு சேர்ந்து இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கட்டும் என்று தோன்றவில்லை.

  அந்த நேரத்தில் அவளது முகத்தை நினைத்துப் பார்த்தாலே அழுகை தான் வரும் கூடவே தாழ்வு மனப்பான்மை வேறு ஒட்டிக் கொள்ள தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்திடுவேன்.

  காலங்கள் ஓடியது. ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது. அவளுக்கு வேறொருத்தருடனும் எனக்கு வேறொருத்தியுடனும் திருமணமும் முடிந்திருந்தது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Father Role In Son Love Marriage

  Father Role In Son Love Marriage
  Story first published: Saturday, April 28, 2018, 15:18 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more