காதல் தாகத்தைத் தீர்க்க, காமத்துப்பால் அள்ளித் தெளிக்கும் நலம்புனைந்துரைத்தல்!

Posted By:
Subscribe to Boldsky
Relationship Tips from Nalampunaindhuraiththal Kalaviyal Thirukkural

காமத்துப்பால் என்று சொல்லி, திருவள்ளுவர் காதலையும், உறவையும், அதன்பால் ஆண், பெண் அழகின் ரசனையையும் அள்ளிக் கொடுத்த அதிகாரங்களை பெரும்பாலும் படிக்காமலே விட்டுவிட்டோம். ஒருவேளை அதை இன்பத்துப்பால் என்று சொல்லி பேசியிருந்தால், அந்த குறள்களில் இருக்கும் இன்பத்துப்பாலை அள்ளி, அள்ளிப் பருகி காதல் தாகத்தைத் தீர்த்திருக்கலாம்.

இன்பத்துப்பாலில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் அனிச்சம் மலரையும், பெண்களின் முக அழகையும், இயல்பையும் உவமைப்படுத்தி அசத்தியிருக்கிறார் திருவள்ளுவர். ஒவ்வொரு குறளிலும் தெய்வப் புலவரின் கற்பனை மிதமிஞ்சி வழிகிறது.

இன்பத்துப் பாலை கரைத்துக் குடித்துவிட்டால், இவரைவிட பெரும் காதலர் இவ்வுலகில் இருந்திருக்க இயலாது என்பதை அனைவரும் அறிவார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறள் 1111:

குறள் 1111:

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.

மு.வரதராசனார் உரை:

அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

சாலமன் பாப்பையா உரை:

அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!.

குறள் 1112:

குறள் 1112:

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.

மு.வரதராசனார் உரை:

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

சாலமன் பாப்பையா உரை:

நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்).

குறள் 1113:

குறள் 1113:

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!.

மு.வரதராசனார் உரை:

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

சாலமன் பாப்பையா உரை:

மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!.

குறள் 1114:

குறள் 1114:

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே! எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.

மு.வரதராசனார் உரை:

குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.

குறள் 1115:

குறள் 1115:

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.

மு.வரதராசனார் உரை:

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

சாலமன் பாப்பையா உரை:

என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

குறள் 1116:

குறள் 1116:

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.

மு.வரதராசனார் உரை:

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

சாலமன் பாப்பையா உரை:

அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.

குறள் 1117:

குறள் 1117:

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.

மு.வரதராசனார் உரை:

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

சாலமன் பாப்பையா உரை:

நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?.

குறள் 1118:

குறள் 1118:

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

மு.வரதராசனார் உரை:

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

சாலமன் பாப்பையா உரை:

நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

குறள் 1119:

குறள் 1119:

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

மு.வரதராசனார் உரை:

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

சாலமன் பாப்பையா உரை:

நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

குறள் 1120:

குறள் 1120:

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.

மு.வரதராசனார் உரை:

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

சாலமன் பாப்பையா உரை:

உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relationship Tips from Nalampunaindhuraiththal Kalaviyal Thirukkural

Relationship Tips from Nalampunaindhuraiththal Kalaviyal Thirukkural
Story first published: Tuesday, January 2, 2018, 11:30 [IST]