பெண் கண் ஜாடையில் காமம் அறிதல் - திருவள்ளுவர் குறிப்பறிதலில் கூறியவை!

Posted By:
Subscribe to Boldsky

திருக்குறளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய முப்பால்களில் ஒன்று காமத்துப்பால். காமத்துப்பால் என்பதற்கு இன்பத்துப்பால் என்ற மற்றுமொரு பெயரும் இருக்கிறது.

காமம் என்பது பழந்தமிழ் சொல் ஆகும். இதன் அர்த்தம் ஒருவர் மீது உடல் சார்ந்த ஆசை கொள்வது அல்ல. காமம் என்பதன் உண்மை பொருள் காதல். காலப்போக்கில் காதல், காமம் என்பது இருவேறு பொருள் கொள்ளும் படி மருவி போனது.

உண்மையில் உடல் ரீதியான ஆசைக்கு நாம் பயன்படுத்த வேண்டிய சொல் இச்சை. காமம் என்ற சொல்லின் பொருள் வேறுப்பட்டு போனதால் தான் திருக்குறளில் காமத்துப்பாலில் வள்ளுவர் காதல் பற்றி கூறிய பல நல்ல கருத்துக்கள் பலரும் அறியமால் போனதற்கு காரணமாகிவிட்டது.

குறிப்பறிதல் எனும் அதிகாரத்தில் காதலில் பெண்ணின் கண் ஜாடை கொண்டு அறியப்படும் காதல் குறிப்புகள் குறித்து திருவள்ளுவர் எழுதியுள்ளது பற்றி இந்த கட்டுரையில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறள் : 1091

குறள் : 1091

"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.

மு.வரதராசனார் உரை:

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

சாலமன் பாப்பையா உரை:

இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

குறள் 1092:

குறள் 1092:

"கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.

மு.வரதராசனார் உரை:

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

குறள் 1093:

குறள் 1093:

"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.

மு.வரதராசனார் உரை:

என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

சாலமன் பாப்பையா உரை:

நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

குறள் 1094:

குறள் 1094:

"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?.

மு.வரதராசனார் உரை:

யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:

நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

குறள் 1095:

குறள் 1095:

"குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

மு.வரதராசனார் உரை:

என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:

நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

குறள் 1096:

குறள் 1096:

"உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

மு.வரதராசனார் உரை:

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.

குறள் 1097:

குறள் 1097:

"செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

மு.வரதராசனார் உரை:

பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

குறள் 1098:

குறள் 1098:

"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

மு.வரதராசனார் உரை:

யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

சாலமன் பாப்பையா உரை:

யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

குறள் 1099:

குறள் 1099:

"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

மு.வரதராசனார் உரை:

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

குறள் 1100:

குறள் 1100:

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல."

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.

மு.வரதராசனார் உரை:

கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

சாலமன் பாப்பையா உரை:

காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Tips From Thirukkural Kuriparithal Adhigaram!

Relationship Tips From Thirukkural Kuriparithal Adhigaram!
Story first published: Wednesday, September 20, 2017, 12:36 [IST]