16 வயசுல நான் செய்த சின்ன தவறு என் வாழ்க்கையையே புரட்டி போட்டது! - முதல் காதல் அனுபவம்! #mystory54

Written By:
Subscribe to Boldsky

அப்போது எனக்கு 16 வயது... நான் தினமும் பள்ளிக்கு செல்வது, வீடு திரும்புவது என்று இருந்தேன். நான் எங்கள் வீட்டில் ஒரு சுட்டி பொண்ணு. நான் தான் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. நான் படிப்பிலும், விளையாட்டிலும் ரொம்ப சுட்டி... என் வாழ்க்கை நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. அந்த மாலை வேளை தான் என் வாழ்க்கையில் ஒரு புது திருபத்தை கொண்டு வந்தது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராங்க் நம்பர்

ராங்க் நம்பர்

அன்று நான் என் அண்ணாவிற்கு கால் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மெல்லிய குரல் ஹலோ.. யார் பேசறீங்க? என்றது..! என்னடா இது நம்ம அண்ணாவோட குரல் இப்படி இருக்காதே என்று நினைத்து, நம்பரை பார்த்தேன்! ஐயோ... ராங்க் நம்பர்... உடனே போனை கட் செய்து விட்டேன்.. மனசு படபடப்பட என்று அடித்துக் கொண்டது. அடுத்த நொடியே போனும் அடித்தது... ஐய்யயோ என்று காலை கட் செய்து விட்டேன்... ஒரு நான்கு, ஐந்து தடவை போன் வந்திருக்கும்..

பயந்தேன்!

பயந்தேன்!

அப்போது தான் யோசித்தேன்.. அம்மா, அப்பா இருக்கும் போது கால் வந்தால், நான் மாட்டிக்கொள்வேனே.. என்ன செய்வது என்று யோசித்தேன்.. சரி, அந்த ராங் நம்பருக்கு கால் செய்து, நான் தப்பா கால் பண்ணிட்டேன்.. சாரி.. இனிமேல் கால் பண்ணாதீங்கனு சொல்லிறலாம்னு நினைத்து, கால் செய்து கூறினேன்... இட்ஸ் ஒகே...! நான் தப்பா எல்லாம் எடுத்துகல.. என் பிரண்ட்ஸ் யாராவது கால் செய்து இருப்பார்கள் என்று நினைத்து தான் அடிக்கடி கூப்பிட்டேன் சாரி.. டேக் கேர் என்றார் அந்த ராங் நம்பர்...

ஆசை!

ஆசை!

என் வாழ்க்கையில் அதிகமாக ஆண்களுடன் பேசியது கிடையாது... சொல்லப் போனால் ஆண் நண்பர்களே கிடையாது.. என் தோழிகளுக்கு எல்லாம் ஆண் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. அதை பார்த்து.. நமக்கு ஒரு ஆண் நண்பர் இல்லையே என்ற ஒரு கவலை என் இதயத்தில் ஒரு ஓரமாய் தான் இருந்தது.. அப்போது தான் என் மனதில் ஆசை தோன்றியது நம்ம ஏன் இந்த ராங்க் நபரை பிரண்டா வச்சுக்க கூடாதுனு தோன்றியது...!

அறிமுகம்

அறிமுகம்

பலமுறை யோசித்தேன்...! கால் செய்யலாமா வேண்டாமா என்று... சரி என்ன ஆக போகுது... கால் பண்ணி தான் பாத்துருவமே என்று போனை எடுத்தது தான் மாயம்.... சொல்லி வைத்தது போல அவனே எனக்கு கால் செய்து விட்டான்... சந்தோஷமாக இருந்தது.. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.. சிரிப்பை அடக்கிக் கொண்டு போனை எடுத்து பேசினேன்...! ஹலோ... ம்.. சொல்லுங்க என்றேன்.. உங்க பேர் என்ன என்று கேட்டான்.. விதுனா என்றேன்.. நைஸ் நேம்... சூப்பரா இருக்கு என்றான்.. என் பேர் அருண்... நான் பி.இ படிக்கிறேன்.. மூன்றாவது ஆண்டு என்றான்.. எனது சொந்த ஊர் விருதுநகர் நான் இங்கே காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிச்சுட்டு இருக்கேன் என்றும் கூறினேன்.. நான் எல்லாவற்றிக்கும் ம்...ம்.. என்று கூறினேன்... எல்லாத்துக்கும் ம்... தானா? என்று கேட்டான்.. நான் ம்.. என்று சொன்னோன்..

இது தேவையா?

இது தேவையா?

இந்த நட்பு தேவையா என்று எல்லாம் நான் யோசிக்கவில்லை.. போனில் ஒரு ஆணுடன் பேசுவது மட்டும் எனக்கு பயமாக இருந்தது.. இருந்தாலும் அருண் உடனான நட்பு எனக்கு பிடித்திருந்தது. தினமும் மாலையில் வீட்டிற்கு வந்த உடன் அவனுக்கு கால் செய்வது தான் என் முதல் வேலை... பின் இரவில் கொஞ்ச நேரம் சாட்டிங்.. காலையில் ஒரு குட் மார்னிங் என்று உற்சாகமாக சென்று கொண்டிருந்தது எங்களது நட்பு...

வாய்ஸ் சூப்பர்!

வாய்ஸ் சூப்பர்!

நான் அவனிடம் அதிகமாக பேசமாட்டேன்.. போன் செய்தால் அவனே தான் அதிக நேரம் பேசுவான். நான் சிரித்துக் கொண்டே அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.. ஒரு நாள் என் குரல் நன்றாக இருக்கிறது என்று என்னை ஒரு பாட்டு பாடு என்று கூறினான்... நான் முதலில் முடியாது என்று மறுத்துவிட்டேன்.. தினமும் ஒரு பாட்டு பாடு பிளிஸ் என்று கெஞ்சிக் கொண்டே இருந்தான்... நானும் பாடினேன்... அது மாலையில் யாரோ மனதோடு பேச.... என்ற பாடல்...

சண்டை...

சண்டை...

பாடி முடித்ததும்.. சூப்பர் நீ இவ்வளவு நல்லா பாடுவனு சத்தியமா நான் எதிர்பார்க்கல... வெரி நைஸ்... ஆமா இந்த பாட்டு எனக்காகவா என்றான்.... என்ன? என்றேன்.. இல்ல.. மாலை நேரத்துல தான நான் உன் கூட பேசற அதான் என்னை நினைத்து பாடினயோ என்று கேட்டேன் என்றான்.. ஐயோ மொக்க தாங்கல... போனா போகுது ஒரு பையன கெஞ்ச வைக்க வேண்டாமேனு ஒரு பாட்டு பாடுனா.. நீங்க என்னடானா எனக்காகனு கேக்கறீங்க.. போங்க.. நான் போனை வைக்கிறேன் என்று வைத்துவிட்டேன்...!

முக்கியத்துவம் அளித்தான்!

முக்கியத்துவம் அளித்தான்!

அவன் நான் கோபமாக இருக்கிறேன் என்று நினைத்து அடிக்கடி எனக்கு கால் செய்தான்... நான் எடுக்கவில்லை.. சாரி.. சாரி என்று மெசேஜ் வந்தது.. ஆனால் அவன் என்னிடம் கெஞ்சுவது எனக்கு சந்தோஷமாக இருந்தது... நான் அவனுக்கு அவ்வளவு முக்கியமா என்று நினைத்து சந்தோஷப்பட்டேன்.. நம்மள இந்த அளவுக்கு விரும்பறவங்கள் நம்ம கஷ்டப்படுத்த கூடாதுனு போனை எடுத்து பேசினேன்... எனக்கு கோபம் எல்லாம் ஒன்றும் இல்லை.. நான் சும்மா நீங்க என்ன சொல்லறீங்கனு பாக்கலாம்னு தான் அப்படி சொன்னேன் என்றேன்... அடிப்பாவி... எங்க நீ இனிமேல் என்கிட்ட பேசமாட்டியோனு நினைத்து பயந்துட்டேன் என்றான்... உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்! அப்படி எல்லாம் பேசாம இருக்க மாட்டேன் என்றேன்...

மிஸ் யூ..!

மிஸ் யூ..!

எனக்கு என்னையே பிடிக்க தொடங்கி விட்டது.. இதுவரை எனக்கு பாட தெரியும் என்பது எனக்கே தெரியாது... என்னை அவன் பாராட்டியது பிடித்தது.. நான் பேசவில்லை என்றால் தவிக்கும் அவனது தவிப்பு பிடித்திருந்தது... இதை எல்லாம் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில்.. எங்கள் ஊரில் இரண்டு நாட்கள் நல்ல மழை... கரண்ட் இல்லை.. அவனுடன் இரண்டு நாட்கள் முழுதாக எதுவுமே பேசவில்லை... மூன்றாம் நாள் மாலையில் தான் பேசினேன்... நான் ஹலோ என்றதும், ஏன் ரெண்டு நாளா கால் பன்னலனு, அவன் என்னை திட்ட ஆரம்பித்துவிட்டான். சாரி, இந்த மாதிரி மழை.. கரண்ட் இல்ல.. அதான் என்றேன்... ஏய் லூசு உன்ன எவ்வளவு மிஸ் பண்ணுன தெரியுமா டி என்று கோபமாக கேட்டான்... எனக்கு ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல இருந்தது... கூடவே உச்சி முதல் பாதம் வரை ஒரு காதல் ஷாக்கும் அடித்தது...

குடுபத்தின் அறிமுகம்

குடுபத்தின் அறிமுகம்

அவனுடன் பேசும் நேரங்கள் நீண்டன.. வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி பேசினேன்.. ஒருநாள் அவனது சொந்த ஊரான விருதுநகருக்கு சென்று இருந்தான்.. அப்போது நான் கால் செய்த போது அவனது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் என்னுடன் போட்டி போட்டுக் கொண்டு பேசினார்கள். கிட்டத்தட்ட பத்து பேர் பேசி இருப்பார்கள்.. அருண் எந்த பொண்ணு கூடவும் பேசவே மாட்டான்.. உன் கூட தான் பேசறான்.. எப்போ பாத்தாலும் படிப்பு.. படிப்புனு இருக்கான்.. என்று கூறினார்.. எனக்கு அவனை நண்பனாக அடைந்ததில் பெருமையாக இருந்தது... அவனுடன் பேசிய ஒவ்வொரு நாளும் என்னை சந்தோஷப்படுத்தியது... என்னை நேசிக்க இத்தனை பேர் இருக்காங்களா என்ற எண்ணம் என்னை உயர்த்தியது...

இது காதலா... முதல் காதலா...?

இது காதலா... முதல் காதலா...?

ஒரு நாள் தனிமையில் இருக்கும் போது யோசித்து பார்த்தேன்.. எனக்கு அவன புடிச்சு இருக்கு.. அவனுக்கும் என்ன பிடிச்சிருக்கு.. அவங்க குடும்பமும் எனக்கு ஒகே தான்... என்கிட்ட நல்லா பேசறான்.. அவன் பேசறது எல்லாம் என்னை காதலிக்கிற மாதிரியே இருக்கே.. ஒருவேளை அவன் நார்மலா தான் பேசறானா... இல்ல.. இல்ல.. நான் பேசலனா என்ன மிஸ் பன்னற.. என் குரல் நல்லா இருக்குனு இரசிக்கிறான்.. வீட்டுல அறிமுகப்படுத்தி வைக்கிறான்... அவன் என் கூட மட்டும் தான் பேசறானு அவங்க அம்மாவே சொல்லறாங்க... இதுக்கு மேல என்ன வேணும்... காதலிக்கலாமா என்று மனசு கேட்டது...? ஐ மிஸ் யூ டி லூசுனு என்கிட்ட சொன்னதுமே அவன் மேல காதல்ல விழுந்துட்டனே என்று சிரித்துக் கொண்டேன்....!

கண்ணில் தோன்றா காட்சி...

கண்ணில் தோன்றா காட்சி...

அவன் மீது அக்கறை அதிகமானது... உரையாடலும் நீண்டது... நாங்கள் இரண்டு வருடமாக, காதல் பேச்சுக்களை இரட்டை அர்த்ததுடனேயே பேசிக் கொண்டு.. காதலை மறைத்து.. மறைத்து வாழ்ந்து வந்தோம்... நான் பள்ளி பருவம் முடிந்து கல்லூரி பருவத்திற்கு சென்று விட்டேன்.. அவனும் பி.இ முடித்து, எம்.இ படித்துக் கொண்டிருந்தான். இரண்டு வருடமாக போனில் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்தோம். என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த குரலுக்கு சொந்தகாரனை பார்க்கவில்லை... பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பார்க்க வேண்டும் என்று இருவருமே கேட்டுக்கொள்ளவில்லை.. உணர்வுகள் இரண்டும் சேர்ந்து விட்டதால், முகத்தை பற்றி கவலை இல்லை.. அதுமட்டுமில்லாமல் சுவாரஸ்யத்தை கெடுத்துக் கொள்ளவும் விரும்பவில்லை....

ஞாயிறு 10.30...

ஞாயிறு 10.30...

ஒரு நாள் அவன் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று கூறினான்.. நானும் உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்று கூறினேன்... சன் டே 10.30க்கு சொல்லறேன் என்றான்... அது என்ன 10.30 என்றேன்.. அது உன் பிறந்த நேரம்... அதான்.. என்றான்... காதலை தான் சொல்லப் போகிறான்.. என்று நினைத்துக் கொண்டேன்... அவன் காதலை சொன்னால் உடனே சரினு சொல்லிறலாமா... இல்ல யோசிச்சு சொல்லறனு சொல்லலாமா? ஐயோ என்ன சொல்லறது... எப்படி ரியாக்ட் பண்ணறதுனு ஒரு குழப்பம்.. கண்ணாடியை பார்த்து இப்படி தான் பேசனும்னு பயிற்சி எடுத்துக் கொண்டேன்... மனதில் பலப்பல ஆசைகள்...! அதே சமயம்... இரண்டு ஆண்டுகளாய் நீடித்த சுவாரஸ்யம் முடிந்து விடுமோ என்ற பயமும் கூட... ஒன்றும் புரியவில்லை... தலைக்கால் புரியாமல் போனேன்...

காதலை யார் முதலில் சொல்வது...

காதலை யார் முதலில் சொல்வது...

ஞாயிற்றுக்கிழமை நாள் வந்தது.. போனில் தான் பேசப்போகிறேன் என்றாலும் கூட, காலையில் நேரத்தில் எழுந்து குளித்து... அவனுக்கு பிடித்த ஒயிட் கலர் டிரஸ் போட்டுக் கொண்டு, கோவிலுக்கு போய்விட்டு வந்து போனுக்காக காத்திருந்தேன்... போன் 10.25க்கு வந்தது... நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது... உடல் எல்லாம் ஒரே நடுக்கம்.. போனை எடுத்தேன்.. சந்தோஷமாக எதுவும் அறியாதது போல ஹலோ சொல்லுங்க அருண் என்றேன்... ஒன்னும் இல்ல.. உன்கிட்ட ஒரு விஷயம் 10.30க்கு சொல்லனும்னு சொன்னன்ல அதுக்காக தான் கால் பண்ணினேன் என்றான்.. ஓ.... ஆமாம்ல... நான் மறந்தே போயிட்டேன் என்று சீன் போட்டேன்...

எப்படா சொல்லுவ?

எப்படா சொல்லுவ?

சரி சொல்லுங்க என்றேன்... வெயிட்.. வெயிட்... 10.30 ஆகட்டும் சொல்லறேன் என்றான்... ஆமா நீ என்னமோ சொல்லறனு சொன்னயே சொல்லு என்றான்... ஐயோ இல்ல... நீங்க மொதல்ல சொல்லுங்க என்றேன்... நோ...நோ.. லேடிஸ் தான் முதல்ல என்றான்.. கடவுளே அதெல்லாம் நான் முதல்ல சொல்ல கூடாது... நீங்க தான் முதல்ல சொல்லனும் ப்ளீஸ் சொல்லுங்க என்றேன்... ம்.. சொல்லறேன்.. 10.30 ஆகட்டும் என்றான்... காதலுக்கான அனைத்து உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் உடலில் நடந்து கொண்டிருந்தது....

இது என்ன கனவா?

இது என்ன கனவா?

10.30 ஆனது... சொல்ல ஆரம்பித்தான்.. இதை சொன்னால் நீ என் கூட பேசாம இருக்க கூடாது... ஷாக் ஆக கூடாது... ப்ளீஸ் நான் சொல்ல போறது தப்பா இருந்தா தப்புனு சொல்லு.. அதுக்காக நீ என் கூட பேசாம இருந்தா என்னால தாங்க முடியாது என்றான். அப்படி என்ன சொல்ல போற.. பரவல்ல சொல்லு என்றான்... அவன் சொல்ல ஆரம்பித்தான்... நான் படபடப்பாக இருந்தேன்... நான் ஒரு பொண்ண லவ் பண்ணற.. அந்த பொண்ண சின்ன வயசுல இருந்தே தெரியும். அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு தான்... இப்போ தான் ஒரு மாசத்துக்கு முன்னால என்ன லவ் பண்ணறதா சொன்னா... நானும் ரெண்டு நாள் உக்கார்ந்து நல்லா யோசிச்சு பார்த்தேன்... ஒரே படிப்பு.. பக்கத்து வீடு.. என்ன ரொம்ப நல்லா பாத்துபானு நம்பிக்கை இருக்கு... நானும் ஒகே சொல்லிட்டேன்.. அப்பறம் ரெண்டு பேரு வீட்டுலயும் சொல்லி சம்மதம் வாங்கியாச்சு... இத உன்கிட்ட இருந்து மறச்சுட்ட... சாரி... என் மேல கோபப்படாத.. என்றான்....

உயிருள்ள பிணமானேன்!

உயிருள்ள பிணமானேன்!

இத எல்லாம் கேட்டு எனக்கு தூக்கிவாறிப்போட்டது... என் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே இழந்தது போன்ற ஒரு உணர்வு... உயிர் இருந்தும் கூட ஒரு பிணமாக நின்றேன்... அவன் ஹலோ.. ஹலோ... என்றான் எனக்கு பேச வாய் வரவில்லை... எனக்கு தலைசுற்றி கீழே விழுந்துவிட்டேன்... என் தம்பி வந்து என் மீது தண்ணீர் தெளித்து எழுப்பியதும் தான் இயல்பு நிலைக்கு வந்தேன்.. கீழே விழுந்ததில், கை.. கால்.. தலை எல்லாம் ஒரே காயம்... அவன் பொய் சொல்லி இருப்பானோ என்று குழப்பம்... போன் செய்யலாம் என்று போனை எடுத்தால்... போன் உடைந்து இருந்தது... எங்கள் ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் தான் ஒரு போன் உள்ளது.. வேகமாக சைக்கிளை அழுத்தி... மூச்சு வாங்க... வியர்த்துக் கொட்ட தொலைப்பேசி இருக்கும் கடையை அடைந்தேன்... அங்குள்ள தொலைப்பேசியில் அவனுக்கு கால் செய்தேன்...

மனம் உடைந்தேன்!

மனம் உடைந்தேன்!

மூச்சு வாங்குகிறது... கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது... நெற்றி.. கை, கால்களில் இரத்தம்.... போன் கடைக்காரர் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்.. ஆனால் எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.... அவனுக்கு போன் செய்தேன்... இது கூறியது உண்மையா என்றேன்... ஆமாம் என்றான்... நான் அழுதேன்.... அவனிடம் என்ன என்னவோ பேசினேன்.. அன்று மட்டும் நான் 1000 ரூபாய்க்கு போன் பேசினேன்... இரவு 7 மணி ஆனாது என்னிடம் 100 ரூபாய் மட்டும் தான் இருந்தது... கடைக்காரர் என்னை திட்டினார்... மீதி பணத்திற்கு எனது சைக்கிளை விட்டுவிட்டு அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்...!

இன்னொருத்திக்கு சொந்தமானவன்

இன்னொருத்திக்கு சொந்தமானவன்

என்னிடம் இருந்து காதலிக்கிறேன் என்ற வார்த்தையை வாங்க தான் அவன் இவ்வாறு விளையாடுகிறான் என்று தோன்றியது... சரி இனி என்னால் இந்த வலியை தாங்க முடியாது... என்று என் காதலை அவனிடம் கூறினேன்.. ஆனால் அவனோ உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் வர நான் காரணமா இருந்தா சாரி....! நான் இன்னொருத்திக்கு சொந்தமானவன்.. இனி என்னை காதலிக்கிறாய் என்பதை கேட்க சந்தோஷமா இருக்கு... ஆனா எனக்கு பிரண்டா இரு... என்றான். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை என்று கூறிவிட்டேன்.

இரவு எல்லாம் பேச்சு

இரவு எல்லாம் பேச்சு

அவன் பொய் தான் சொல்கிறான் என்று தோன்றியது... எனது அத்தை பையன் உதவியுடன் அவனது ஜூனியர் ஒருவரது நம்பர் பெற்றேன்.... அவரிடம் கேட்ட போது.. ஆமாம் அவர் இரவு எல்லாம் போனில் யார் கூடயோ பேசிக்கொண்டு இருப்பார்.... அவர் காதலிப்பது அனைவருக்குமே தெரியும் என்று கூறினார்... அந்த சமயத்தில் அருண் நான் தொல்லை செய்ய கூடாது என்பதற்காக அவனது போன் நம்பரை மாற்றினான்... நான் நேரில் அவனது கல்லூரிக்கு சென்று பார்த்தேன்... அப்போது கூட என் காதலனை முதல் முதலாக காண போகிறோம் என்ற காதலில் தான் ஒரு மரத்தின் அடியில் காத்துக்கொண்டிருந்தேன்... அவனும் வந்தான்...

தொல்லை செய்யாதே...!

தொல்லை செய்யாதே...!

இத்தனை நாட்களாய் என்னுடம் போனில் பேசிய அனைத்தையும் மறந்துவிட்டது போல... என்ன வேணும் உனக்கு.. என்னை தொல்லை செய்யாதே என்று கூறினான்... என்னிடம் இருந்து வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருந்த அவனுக்கு நான் சாரி என்று மட்டுமே கூறி விட்டு வந்தேன்....!

சித்தபிரம்மை!

சித்தபிரம்மை!

அதற்கு பின் வரும் வழிகள் எல்லாம் சித்தபிரம்மை பிடித்தது போல தான் வந்தேன்... என் அத்தை மகன் தான் என்னை வீட்டில் கொண்டு வந்து சேர்த்தான்.. எனக்கு அறிவுரைகள் கூறினான்... யாருடைய அறிவுரையும் காதில் விழவில்லை... பிரம்மை பிடித்தது போலவே மூன்று வருடங்கள் கழிந்தது.... எத்தனை இரவுகளை கண்ணீருடன் கழித்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்..

மாற்றம்

மாற்றம்

நான் இப்போது வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன்... என் தோழி ஒருத்தியிடன் என் பிரச்சனைகள் அனைத்தையும் கூறினேன். என்னை அவள் ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றாள். இப்போது தான் என் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்துள்ளது... இனி என் வாழ்க்கையை எனக்காவும் எனது குடும்பத்திற்காகவும் வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்..

திருமணம்

திருமணம்

இன்றுவரை அவன் என்னை காதலித்தானா என்று தெரியாது... அவனது திருமண செய்தி மட்டும் அவனது நண்பன் மூலமாக தெரிந்தது....! தவறு யார் மேல் வேண்டுமானாலும் இருக்கட்டும்... ஆனால் காதல் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நியாபகத்தையும் வலியையும் தந்துவிட்டு செல்கிறது...!

பரிசுகள்

பரிசுகள்

நாங்கள் காதலித்துக் கொண்டிருந்த போது, அவன் எனக்காக ஒரு பரிசு வாங்க வேண்டும்.. வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.... ஆனால் நான் அவனுக்கு சில பரிசுகள், கிரிடிங் கார்டுகள், புத்தகங்கள் போன்றவற்றில் எனது பெயரையும் அவனது பெயரையும் சேர்த்து எழுதி கொடுத்தேன்... அதை எல்லாம் அவன் தூக்கி எறிந்து இருப்பனா? ஒருவேளை வைத்திருந்தால்... அதை பார்க்கும் போது எல்லாம் என் நியாபகம் வருமா?

நியாபகம்

நியாபகம்

எனது மனதில் அவனது கால் தட சுவடுகள் மட்டும் தான் இருக்கிறது. என்னை இப்போது வீட்டில் திருமணம் செய்து கொள் என்று அடிக்கடி கூறுகிறார்கள்... எனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருப்பார் என்று தெரியவில்லை... எப்படி இருந்தாலும் என் கடந்த காலம் பற்றி சொல்லிவிட வேண்டும் என்று இருக்கிறேன்...! என் முதல் காதல் யாருக்கு வேண்டுமானலும் சாதாரணமாக இருக்கலாம்.. ஆனால் எனக்கு அது வாழ்வின் இறுதி வரை மறக்காது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story :My Wrong number relationship story

My Story :My Wrong number relationship story