மழை நேரத்தில் 1 கப் இட்லி மாவு இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க.. டக்கரா இருக்கும்..

Posted By:

Vellai Appam Recipe In Tamil: தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அதுவும் பஜ்ஜி, போண்டா போன்று எண்ணெயில் பொரிக்கும் ஸ்நாக்ஸ்களை சாப்பிட கேட்பார்கள். ஆனால் உங்கள் வீட்டில் பஜ்ஜி மாவு இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம்.

1 கப் இட்லி மாவு இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் மொறுமொறுவென்று வெள்ளை அப்பம் செய்து கொடுங்கள். இந்த வெள்ளை அப்பத்திற்கு காரமாக ஒரு சட்னியை செய்து கொடுத்தால், இன்னும் சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த வெள்ளை அப்பத்தை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடுத்து மழை பெய்யும் போதெல்லாம் இதை செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

Vellai Appam How To Make a Crispy Vellai Appam Recipe

உங்களுக்கு வெள்ளை அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* தேங்காய் - 2 பத்தை (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சட்னிக்கு...

* எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* தேங்காய் - 4 பத்தை
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை 1 கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1/4 கப் அரிசி மாவை சேர்த்து, அதோடு பொடியாக நறுக்கிய தேங்காய், 1/4 டீஸ்பூன் மிளகு, பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம், 1 சிட்டிகை பெருங்காயத் தூள் மற்றும் 1 சிட்டிகை ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் இந்த அப்பத்திற்கு ஒரு சட்னியை அரைக்கலாம். அதற்கு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வெள்ளையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, அத்துடன் நறுக்கிய தேங்காய் பத்தையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு சிறு குழிக்கரண்டியை எடுத்து, கலந்து வைத்துள்ள மாவை நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி, அப்பம் மேலெழுந்து வந்த பின், அடுத்த கரண்டி மாவை ஊற்ற வேண்டும்.
* இப்படி அனைத்து மாவையும் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வெள்ளை அப்பம் தயார். இந்த வெள்ளை அப்பத்தை, அரைத்த சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, May 18, 2025, 18:38 [IST]
Desktop Bottom Promotion