மழை நேரத்தில் 10 நிமிடத்தில் இப்படியொரு ரசத்தை குக்கரில் செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்...

Posted By:

Tomato Rasam Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை சற்று குளிர்ச்சியாக இருப்பதால், நிறைய பேர் சளி பிடித்து அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் ரசம் செய்து குடித்தால் அருமையாக இருக்கும். அதுவும் மதிய வேளையில் சமைக்க பிடிக்காவிட்டால், வாய்க்கு ருசியாக 10 நிமிடத்தில் தக்காளி ரசத்தை குக்கரில் செய்து சாப்பிடுங்கள்.

என்னது குக்கரில் ரசமா என்று கேட்கலாம். ஆம், குக்கரில் அருமையான சுவையில் ரசம் செய்யலாம். இந்த ரசம் நீங்கள் வழக்கமாக செய்யும் ரசத்தை விட அருமையாக இருக்கும். மேலும் இது முதல்முறை சமைப்பவர்கள் செய்யக்கூடிய வகையில் ஈஸியாகவும் இருக்கும்.

Tomato Rasam How To Make a Instant Tomato Rasam In Cooker

உங்களுக்கு தக்காளி ரசத்தை எப்படி குக்கரில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குக்கர் தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/4 கப்
* தக்காளி - 3
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

பிற பொருட்கள்...

* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* ரசப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* கல் உப்பு - 2 டீஸ்பூன்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - 4-5 கப்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* நெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2

செய்முறை:

* முதலில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, 1 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, ஊற வைக்க வேண்டும். புளி நன்கு ஊறியதும், அதை நன்கு கைகளால் பிசைந்து வடிகட்டி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரில் 1/2 கப் துவரம் பருப்பை எடுத்து, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 1/4 கப் நீரை ஊற்றி, அத்துடன் 3 தக்காளி மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பருப்பையும், தக்காளியையும் மசித்து விட வேண்டும்.
* பின் அந்த குக்கரை அப்படியே அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் ரசப்பொடி, 2 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் 4 கப் நீரை ஊற்றி, பெருங்காய தூள், 2 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* ரசம் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து, 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கலந்தால், சுவையான தக்காளி ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, May 26, 2025, 14:25 [IST]
Desktop Bottom Promotion