குலாப் ஜாமூன் செஞ்ச சர்க்கரை பாகு நிறைய மிச்சம் இருக்கா? அதைவைச்சு இந்த ஸ்வீட் செய்யுங்க... சூப்பரா இருக்கும்!

Posted By:

ஒரு வழியா தீபாவளி பண்டிகை முடிஞ்சிருச்சு. எங்க வீட்ல தீபாவளி பலகாரமே முடிஞ்சிருச்சுன்னு நீங்க சொல்றது நல்லாவே புரியுது. தீபாவளி அப்படினாலே செய்ய கூடிய சில பலகாரம் முறுக்கு, அதிரசம், அப்புறம் ரொம்ப பேருக்கு புடிச்ச குலாப் ஜாமுன் தான். மாவை உருட்டி எண்ணையில் பொரிச்சு சர்க்கரை பாகுல ஊறவிட்டு எடுத்து வாயில வச்சதும் கரையும் பாருங்க அப்படி இருக்கும்.

அப்புறம் என்ன செஞ்சது தீர்த்து போற வரைக்கும் சர்க்கரை பாகு கூட சேர்த்து கொஞ்சம், சேர்க்கமா ஜாமுன் மட்டும்னு சாப்பிட்டு காலி பண்ணிடுவோம். ஜாமுன் எல்லாம் தீர்த்தும், மழைக்கு அப்புறம் ரோட்டுல இருக்க பள்ளத்துல தேங்கி இருக்க தண்ணி மாதிரி அந்த சர்க்கரை பாகு மட்டும் தங்கிடும்.

Sweet Recipe How to Use Leftover Gulab Jamun Sugar Syrup

இப்படி தங்கி போற சர்க்கரை பாகுவ சிலர் காபி, டீ, இல்ல ஜூஸ்-ன்னு கலந்து குடிப்பாங்க. சிலர் அவங்க வீட்ல குழந்தைகளுக்கு இட்லி, தோசை கூட சைடு டிஷ்ஷா சாப்பிட கொடுப்பாங்க. சிலர் எங்களுக்கு பிடிக்காதுன்னு கீழ கொட்டிடுவாங்க. அப்படி கீழ கொட்டி வீணாக்காம எப்படி அந்த சர்க்கரை பாக வைச்சு சூப்பர் ஸ்னாக்ஸ் செய்யலாம்னு இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

- மைதா மாவு அல்லது கோதுமை மாவு - ½ கப் முதல் 1 கப்
- ரவை - 1 டீ ஸ்பூன்
- உப்பு - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- நெய் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

- ஈரமில்லாத வாணலியை மிதமான தீயில் அடுப்பில் வைத்து சூடானதும் கோதுமை அல்லது மைதா மாவை சேர்த்து சூடாகும் வரை வறுக்கவும்.
- அதை நன்றாக சலித்து எடுத்து தனியாக வைக்கவும்.
- பின் அதனுடன் ரவை, உப்பு, மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த கலவையை சிறிது சிறிதாக சர்க்கரை பாகுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சப்பாத்தி மாவு பதம் வரும் வரை மாவை சேர்த்து நன்றாக பிசையவும்.
- பிசைந்த மாவை 10-15 நிமிடங்கள் நன்றாக ஊறவிடவும்.
- பின் மாவை நன்றாக உருட்டி சப்பாத்தி மாவை போல் ½ இன்ச் அளவில் தேய்க்கவும்.
- கத்தி அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டி எடுத்து வைக்கவும்.
- உங்களுக்கு விரும்பான வடிவில் வெட்டும் போது மீதமாகும் மாவை மீண்டும் இதே போல் உருட்டி தேய்த்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானது அதில் நாம் நறுக்கி வைத்து இருக்கும் துண்டுகளை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- ஜாமூனின் சர்க்கரை பாகை வீணாக்காமல் உங்க வீட்டு குட்டீஸ் ஸ்னாக்ஸ் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Thursday, November 21, 2024, 21:23 [IST]
Desktop Bottom Promotion