சுரைக்காய் வெச்சு ஒருடைம் இப்படி பாயா செய்யுங்க.. ஆட்டுக்கால் பாயாவே தோத்துப்போயிடும்..

Posted By:

Bottle Gourd Paya Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் பல வீடுகளில் இந்த மாதத்தில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தால் அசைவ உணவுக்கு இணையான சுவையைத் தரும் நல்ல சைவ உணவை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா?

அதுவும் ஞாயிற்றுக்கிழமை காலையில் உங்கள் வீட்டில், பூரி, சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சுரைக்காய் பாயா செய்யுங்கள். இந்த பாயாவானது ஆட்டுக்கால் பாயாவையே தோற்கடிக்கும் அளவில் சுவையாக இருக்கும்.

Suraikkai Paya How To Make a Bottle Gourd Paya Recipe

உங்களுக்கு சுரைக்காய் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சுரைக்காய் - 300 கிராம் (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 1 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 5
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 3/4 கப்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* இஞ்சி - சிறு துண்டு
* பூண்டு - 10 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முந்திரி மற்றும் கசகசாவை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுரைக்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, 7-8 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு, ஊற வைத்த முந்திரி கசகசாவை நீருடன் அப்படியே சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் காயுடன் சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை மிளகாயை கீறிப் போட்டு, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்த பின், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால் சுவையான சுரைக்காய் பாயா தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Sunday, September 29, 2024, 8:17 [IST]
Desktop Bottom Promotion