சிவப்பு அவலும், பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Red Aval Kozhukattai Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? உங்கள் வீட்டில் சிவப்பு அவலும், பாசிப்பருப்பும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு நல்ல சுவையில் ஒரு சத்தான டிபனை செய்து சாப்பிடுங்கள்.

இந்த டிபனுக்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். சிவப்பு அவலை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது நார்ச்சத்து கிடைத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படும். முக்கியமாக இந்த டிபன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Red Aval Kozhukattai How To Make a Red Aval Kolukattai Recipe

உங்களுக்கு சிவப்பு அவல் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிவப்பு அவல் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* சிவப்பு அவல் - 2 டம்ளர்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 1/2 டம்ளர்

வேக வைப்பதற்கு...

* பாசிப்பருப்பு - 1 சிறிய கப்
* மஞ்சள் தூள் - சிறிது
* நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்

வறுத்து பொடிப்பதற்கு...

* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்ங

வதக்குவதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் சட்னிக்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்த

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை நன்கு கழுவி, பின் பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு பாத்திரத்தில் சிவப்பு அவலை எடுத்து, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பு மற்றும் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பாசிப்பருப்பு நன்கு ஊறியதும், அந்த பருப்பில் கூடுதலாக ஒரு 1/2 டம்ளர் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, மூடி வைத்து பருப்பை வேக வைக்க வேண்டும்.
* பருப்பானது நன்கு உதிரி உதிரியாக வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து, நன்கு நிறம் மாற வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த வேர்க்கடலை பவுடரை சேர்த்து கிளறி, பின் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள அவலை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ஒருவேளை கலவையானது சற்று வறண்டு இருப்பதைக் கண்டால், 2 டேபிள் ஸ்பூன் நீரைத் தெளித்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து கலவையானது குளிர்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக உருட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* பின் மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான சிவப்பு அவல் கொழுக்கட்டை தயார்.
* பின்னர் சட்னிக்கு, மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, புளி மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில், தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால் தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, December 17, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion