உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா - 10 நிமிடத்தில் சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Potato Butter Beans Masala Recipe In Tamil: மதியம் சாம்பார், ரசத்துக்கு சிம்பிளான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அதோடு பட்டர் பீன்ஸ் கூட உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் சேர்த்து ஒரு அருமையான மசாலா செய்து சாப்பிடுங்கள்.

இந்த உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா சாம்பார், ரசம் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மசாலா டக்கென்று செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். குறிப்பாக இந்த மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமாக இருக்கும்.

Potato Butter Beans Masala How To Make a Urulaikizhangu Masala Recipe

உங்களுக்கு உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* பட்டர் பீன்ஸ் - 3/4 கப்
* உருளைக்கிழங்கு - 250 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 1/2 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா/கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் பட்டர் பீன்ஸ் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் 2 1/2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த பட்டர் பீன்ஸை சேர்த்து, அதோடு பீன்ஸ் வேக வைத்த நீரை அரை கப் ஊற்றி கிளறி, வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக உதிர்த்து விட்டு நன்கு மசாலா ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் சிக்கன் மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion