பாவக்காயை இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க... பாவக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...!

Posted By:

Pavakkai Puli Kuzhambu Recipe in Tamil: காய்கறிகளிலேயே பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத காய்கறி என்றால் அது பாகற்காய்தான். ஆனால் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது பாகற்காயில்தான். பாகற்காயை பெரும்பாலான மக்கள் வெறுப்பதற்கு காரணம் அதன் கடுமையான கசப்பு சுவைதான். ஆனால் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் நிச்சயம் அவர்கள் உணவில் பாகற்காயை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாகற்காயை தவிர்க்கவும் முடியாது, கசப்பாகவும் சாப்பிட முடியாது என்பவர்களுக்கு பாகற்காயை கசப்பு இல்லாமல் சமைத்து சாப்பிடுவதுதான் ஒரே வழி. பொதுவாக பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடுவார்கள், சிலசமயங்களில் சாம்பார் வைப்பார்கள். ஆனால் பாகற்காயை கசப்பே தெரியாமல் சுவையாக சமைக்க ஒரே வழி அதை புளிக்குழம்பு வைப்பதுதான். செட்டிநாடு பகுதிகளில் இந்த பாகற்காய் புளிக்குழம்பு மிகவும் பிரபலமானது. இந்த பதிவில் கசப்பே இல்லாமல் சுவையான புளிக்குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Pavakkai Puli Kuzhambu Recipe How to Prepare Pavakkai Puli Kuzhambu

தேவையானப் பொருட்கள்:

- நறுக்கிய பாவக்காய் - 1 கப்
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு பல் - 10 முதல் 15 வரை
- தக்காளி - 1
- புளி - ஒரு எலுமிச்சைப் பழ அளவு
- சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

- நல்லெண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1/2 - ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- பாவக்காயின் இரு முனைகளையும் கிள்ளி விட்டு, கொதிக்கும் நீரில் போட்டு, சில நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். (கொதிக்கும் நீரில் சிறிது வெல்லம் அல்லது சர்க்கரையை சேர்த்தால், பாவக்காயின் கசப்பு சற்று குறையும்)

- புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- இந்த புளிக்குழம்பில் புளிப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

- பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

- ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

- பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.

- பின்னர் அதில் பாவக்காய், புளிச்சாறு, உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து சற்று கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.

- இநத புளிக்குழம்பிற்கு "சிறு பாவக்காய்" (மிதி பாவக்காய் என்றும் சொல்வார்கள்) நன்றாக இருக்கும். இல்லையென்றால் சாதரண பாவக்காயையும் உபயோகிக்கலாம்.

- சூடான் சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 24, 2025, 21:30 [IST]
Desktop Bottom Promotion