பாவக்காயை ஒருமுறை இப்படி குழம்பு செய்யுங்க.. ஒரு தட்டு சோறு டக்குன்னு காலியாகும்..

Posted By:

Pavakkai Kulambu: உங்கள் வீட்டில் உள்ளோர் பாகற்காய் என்றாலே ஓடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு பாகற்காயை கொண்டு இந்த மாதிரி குழம்பு செய்து கொடுங்கள். இந்த மாதிரி பாகற்காய் குழம்பு செய்தால், ஒரு தட்டு சோறு டக்குன்னு காலியாகும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு பாவக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாவக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Pavakkai Kulambu How To Make a Bittergourd Kuzhambu Recipe

தேவையான பொருட்கள்:

* பாவக்காய் - 200 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* புளி - 1 எலுமிச்சை அளவு

குழம்பிற்கு...

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* வெல்லம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து, அதையும் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்த பாகற்காயை நீரில் ஒருமுறை அலசி, அதிகப்படியான நீரை கைகளால் பிழிந்து வெளியேற்றி விட வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் வதக்கிய பாகற்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் புளி நீரை ஊற்றி நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வெல்லத்தை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பாவக்காய் குழம்பு தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 28, 2024, 14:37 [IST]
Desktop Bottom Promotion