சன்டே ஸ்பெஷல்: நாஞ்சில் நாட்டு கோழி குழம்பை எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Nanjil Nattu Chicken Kuzhambu Recipe In Tamil: இந்தியாவிலேயே தமிழ்நாட்டு சமையலின் சுவையே தனி தான். அதுவும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சமைக்கப்படும் உணவுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். அதுவும் அசைவ உணவுகள் தான் வேற லெவலில் இருக்கும்.

நீங்கள் அசைவ பிரியர் என்றால் நிச்சயம் வாரந்தோறும் ஏதாவது ஒரு புதிய ரெசிபியை ட்ரை செய்ய நினைப்பீர்கள். அந்த வகையில் இன்று வார இறுதி நாள் என்பதால், வீட்டில் நிச்சயம் சிக்கன், மட்டன் என்று ஏதாவது வாங்கி வந்திருப்பீர்கள்.

Nanjil Nattu Chicken Kuzhambu Recipe

உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியிருந்தால், அந்த சிக்கனைக் கொண்டு வழக்கமாக செய்யும் குழம்பை செய்யாமல், சற்று வித்தியாசமாக நாஞ்சில் நாட்டு கோழி குழம்பை முயற்சித்துப் பாருங்கள். இந்த கோழி குழம்பு சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். இந்த குழம்பை செய்தால், நிச்சயம் வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெறுவீர்கள்.

உங்களுக்கு நாஞ்சில் நாட்டு கோழி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாஞ்சில் நாட்டு கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 1/4 கப்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 4
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா தூள் - 3-4 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 4 (நறுக்கியது)
* தேங்காய் - 1 கப்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பலை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, சிக்கன் மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலா அனைத்தும் சிக்கனுடன் ஒன்று சேரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து 30-35 நிமிடம் குறைவான தீயில் வைத்து சிக்கன் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, மீண்டும் மூடி வைத்து, 15 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறக்கும் போது, எண்ணெய் மேலே மிதந்து கொண்டிருக்கும். இந்நிலையில் அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாஞ்சில் நாட்டு கோழிக் குழம்பு தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Sunday, December 24, 2023, 12:46 [IST]
Desktop Bottom Promotion