மட்டன் வாங்குனா மணக்க மணக்க இப்படி ஒருமுறை கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...

Posted By:

Mutton Gravy Recipe In Tamil: விடுமுறை நாட்களில் காலையில் பெரும்பாலும் பூரி தான் செய்வீர்களா? அந்த பூரிக்கு வீடே மணக்கும் அளவில் ஒரு சைடு டிஷ் செய்து வீட்டில் உள்ளோரை அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் மட்டன் கிரேவியை செய்யுங்கள்.

அதுவும் இந்த மட்டன் கிரேவியை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்தால், சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இது பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Mutton Gravy How To Make a Mutton Gravy Recipe

உங்களுக்கு மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மட்டன் வேக வைப்பதற்கு...

* மட்டன் - 3/4 கிலோ
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு

கிரேவிக்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் கழுவிய மட்டனை சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், சுவைகேற்ப உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மட்டன் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஏற்கனவே மட்டனில் உப்பு சேர்த்துள்ளதால், அளவாக உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் நீர் சுண்டும் அளவில் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் கிரேவி தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Desktop Bottom Promotion