முள்ளங்கி வாங்குனா ஒருடைம் இப்படி குழம்பு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...

Posted By:

Mullangi Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் முள்ளங்கி சாப்பிடமாட்டார்களா? எப்போது முள்ளங்கி வாங்கினாலும், அதைக் கொண்டு சாம்பார் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முள்ளங்கியைக் கொண்டு குழம்பு செய்யுங்கள்.

இந்த முள்ளங்கி குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த முள்ளங்கி குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இப்படி முள்ளங்கியை குழம்பு செய்யும் போது, முள்ளங்கி பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் இது கறிக்குழம்பு சுவையில் இருக்கும். இதனால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Mullangi Kuzhambu How To Make a Radish Kuzhambu Recipe

உங்களுக்கு முள்ளங்கி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (1/2 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* முள்ளங்கி - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* தேங்காய் விழுது - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த கடலைப் பருப்பை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேங்காய் விழுது சேர்த்து கிளறி, குழம்புக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான முள்ளங்கி குழம்பு தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Saturday, August 31, 2024, 14:06 [IST]
Desktop Bottom Promotion